சென்னை: தமிழகத்தில் ஆற்று மணல் அள்ளியதில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படும் விவகாரம், தற்போது மீண்டும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சுமார் 4,730 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆற்று மணல் சட்டவிரோதமாக அள்ளி விற்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை ஏற்கெனவே பகீர் தகவலை வெளியிட்டிருந்தது.
இந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கொடுத்த புகாரின் பேரில், தற்போது தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை (DVAC) தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் DVAC அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி சம்மன் கொடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆறுகளில் அரசு அனுமதித்த அளவை விட பல மடங்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து நேரடி விசாரணையில் இறங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள 28 அரசு ஆற்று மணல் குவாரிகளிலும் எவ்வளவு மணல் எடுக்கப்பட்டது என்பதை அமலாக்கத்துறை துல்லியமாக ஆய்வு செய்தது. அதில், அரசு நிர்ணயித்த அளவை விட பல மடங்கு அதிகமாக ஆற்று மணல் தோண்டி எடுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக அள்ளப்பட்ட மணலின் மொத்த மதிப்பு மட்டும் சுமார் ரூ.4,730 கோடி என்று அமலாக்கத்துறை கணக்கிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த முழுப் பணமும் குற்றச் செயல்கள் மூலமாக சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட வருமானம் என்றும் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்தது. வெறுமனே மேலோட்டமாகப் பார்த்துவிட்டு அமலாக்கத்துறை இந்த மதிப்பீட்டைச் செய்யவில்லை. இதற்காக மிகவும் நவீன அறிவியல் முறைகள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களை அவர்கள் பயன்படுத்தினர். குறிப்பாக, ஐஐடி கான்பூர் நிறுவனத்தின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்களின் உதவியுடன் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ட்ரோன்கள், அதிநவீன ஜியோ ஸ்கேனிங் மற்றும் செயற்கைக்கோள் வரைபடங்கள் மூலம் ஒவ்வொரு குவாரியிலும் பூமிக்கு அடியில் எத்தனை அடி ஆழத்திற்கு மணல் தோண்டப்பட்டுள்ளது, ஆற்றுப்படுகையின் எல்லைகளைத் தாண்டி எங்கெல்லாம் தோண்டப்பட்டுள்ளது என்பதைத் துல்லியமாக அளந்து ஆவணப்படுத்தினர். இந்த முறைகேட்டை நிரூபிக்க அமலாக்கத்துறை கையில் எடுத்த மிக முக்கியமான அஸ்திரம், மணல் அள்ளப் பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரங்களின் ஜிபிஎஸ் தரவுகள் தான். மணல் அள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு பொக்லைன் இயந்திரங்களை விற்ற நிறுவனத்திடமிருந்து, அந்த இயந்திரங்களின் ஜிபிஎஸ் கோ-ஆர்டினேட்ஸ், ஜியோ பென்சிங் விவரங்களை அதிகாரிகள் பெற்றனர். அந்த இயந்திரங்கள் எந்தெந்த நாட்களில் இயங்கின? என்ற அத்தனை விவரங்களும் அந்த தொழில்நுட்பத் தரவுகளில் அப்பட்டமாகப் பதிவாகியிருந்தது. அரசு அனுமதித்த குவாரி எல்லை எது, அங்கு எத்தனை இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த அரசு அனுமதி அளித்திருந்தது என்ற விதிகளோடு இந்த ஜிபிஎஸ் விவரங்களை அதிகாரிகள் ஒப்பிட்டுப் பார்த்தனர். அப்போது, அரசு ஒதுக்கிய எல்லைகளைத் தாண்டி, பல நூறு மீட்டர்கள் அப்பால் சென்று மணல் அள்ளப்பட்டது வெட்டவெளிச்சமானது. ஆற்று மணல் கொள்ளை தொடர்பாக போதிய ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத்துறை கடந்த 2024 ஜூன் 13-ஆம் தேதியே விரிவான ஆதாரங்களுடன் கடிதம் எழுதியது. அதன் பிறகும் நடவடிக்கை இல்லாததால், அதே ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதத்தையும் அனுப்பியது. இந்நிலையில், அமலாக்கத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது விரிவான விசாரணை நடத்த தமிழக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இதில் குற்றம் நிகழ்ந்ததற்கான முகாந்திரம் உள்ளதா என்பதை உறுதி செய்யும் வகையில், ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது DVAC. ரூ.4,730 கோடி அளவுக்கு நடந்ததாகக் கூறப்படும் இந்த பிரம்மாண்ட மணல் முறைகேடு விவகாரத்தில், லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்திலும், பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விவகாரம் என்ன? பின்னணி இதுதான்!
ஐஐடி கான்பூர் நிபுணர்கள்... நவீன தொழில்நுட்பம்!
சிக்க வைத்த பொக்லைன் இயந்திரங்களின் ஜிபிஎஸ்
தினமும் எத்தனை மணி நேரம் ஆற்றுக்குள் வேலை செய்தன?
எந்தெந்த குறிப்பிட்ட இடங்களில் நின்று மணலைத் தோண்டின?டிஜிபி-க்கு கடிதம்... தாமதத்திற்குப் பின் தொடங்கிய விசாரணை!