சரியான நேரத்திற்காக காத்திருந்த விஜய்.. முன்ஜாமீன் ரத்தானதும் அன்பில் மகேஸ் கைது.. நடந்தது என்ன?

  • சென்னை: தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான திமுகவை சேர்ந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த அதிரடி கைது நடவடிக்கை அரங்கேறியுள்ளது.

    Advertisement

    ரூ.100 கோடி மோசடி: வழக்கும் புகாரும்

    தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் (NOC), அங்கீகாரம் மற்றும் தர உயர்வுகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.100 கோடி வரை லஞ்சம் மற்றும் நிதி வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

    Advertisement

    தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் டி.சி. இளங்கோவன் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பள்ளிகளிடம் இருந்து "கட்சி நிதி" மற்றும் கையூட்டு என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்பட்டு, உரிய அனுமதிகள் பெற்றுத் தராமல் ஏமாற்றப்பட்டதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அரசகுமார் கைது மற்றும் வழக்கின் திருப்பம்

    இந்த வழக்கின் முக்கிய புள்ளியாக, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவரான பி.டி. அரசகுமார் அடையாளம் காணப்பட்டார்.

    அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஜூன் 27 அன்று அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ந்தது. அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையிலேயே, அரசின் உயர் மட்டத்திற்கு பணம் கைமாறிய விவகாரங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

    Advertisement

    அரசுத்தரப்பு சாட்சியாக (Approver) மாறுகிறாரா?

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய நபர்கள் மற்றும் வழக்கில் தொடர்புடைய முன்னாள் எம்.எல்.ஏ முத்துகுமார் உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

    குறிப்பாக, பணம் வசூலிக்கப்பட்டு யாருக்குக் கொடுக்கப்பட்டது என்ற விவரங்களை அரசகுமார் மற்றும் சாட்சிகள் வாக்குமூலமாக அளித்துள்ளனர். வழக்கில் தங்களுக்கு தண்டனைக் குறைப்பு கிடைக்கும் நோக்கில் அல்லது சட்டப் பாதுகாப்புக் கருதி, வழக்கில் கைதான முக்கிய நபர் ஒருவர் 'அப்ரூவராக' (அரசுத்தரப்பு சாட்சியாக) மாறி உண்மைகளை வாக்குமூலமாக மாஜிஸ்திரேட்டிடம் பதிவு செய்ய முன்வந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வாக்குமூலங்களே முன்னாள் அமைச்சருக்கு எதிரான மிக வலுவான ஆதாரங்களாக மாறின.

    Advertisement

    முன்ஜாமீன் தள்ளுபடியும் கைதும்

    வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு தன் மீதான பிடி இறுகியதை அறிந்த அன்பில் மகேஸ், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார்.

    நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பு மற்றும் காவல்துறை சார்பில், "மனுதாரர் நேரில் பணம் பேசியதற்கான சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளன; ஆகவே முன்ஜாமீன் வழங்கக் கூடாது" என வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், அன்பில் மகேஸின் முன்ஜாமீன் மனுவைத் திட்டவட்டமாகத் தள்ளுபடி செய்தது. சரியாக இந்த தீர்ப்பிற்காக காத்திருந்த விஜய் தற்போது ஆக்சனில் இறங்கி உள்ளார்.

    Advertisement

    நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருந்த காவல் துறையினர், மனு தள்ளுபடி செய்யப்பட்ட செய்தி கிடைத்த உடனே தனிப்படை அமைத்துச் சென்று அன்பில் மகேஸை அவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்தனர்.

    முன்ஜாமீன் ரத்து, அரசகுமாரின் முந்தைய கைது, சாட்சிகளின் வாக்குமூலம் என அடுத்தடுத்து நகர்ந்த இந்த வழக்கு, அன்பில் மகேஸின் கைதால் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

    English Summary

    TN School Approval Scam: After Arasakumar Case, Ex-DMK Minister Anbil Mahesh Arrested as Bail Plea Rejected