சென்னை: பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 4ஆம் தேதியன்றே மாணவர்களுக்கான பாடநூல்கள், குறிப்பேடுகள், சீருடைகள் உட்பட அனைத்து பொருட்களையும் வழங்க தமிழக அரசு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கோடை வெயில் காரணமாக 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்படும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் நிலவி வரும் கடுமையான கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, மாணவர்களின் நலன் கருதி வருகிற ஜூன் 4ஆம் தேதி 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளே மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் தமிழக அரசு ஒரு முக்கிய அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 4ஆம் தேதியன்றே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பாடப் பொருட்களைத் தாமதமின்றி வழங்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தமிழக அரசு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. "பள்ளி திறந்த பிறகு புத்தகங்கள் வழங்குவதில் எவ்விதத் தாமதமும் இருக்கக் கூடாது. ஜூன் 4-ஆம் தேதி காலை மாணவர்கள் பள்ளிக்கு வந்தவுடனேயே, அவர்களுக்கான பாடநூல்கள் மற்றும் சீருடைகள் அனைத்தும் முழுமையாக விநியோகிக்கப்பட வேண்டும். இதற்கான ஆயத்தப் பணிகளை மே மாத இறுதிக்குள்ளேயே அனைத்துப் பள்ளிகளும் முடித்திருக்க வேண்டும்" என முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு (CEOs) அரசு உத்தரவிட்டுள்ளது. வழக்கமாகத் தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 அல்லது 2-ஆம் தேதிகளில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மே மாத இறுதியிலும் கத்திரி வெயிலின் தாக்கம் குறையாமல், பல மாவட்டங்களில் சதம் அடித்து வருகிறது. வெப்ப அலைகளின் காரணமாகக் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே, 2 நாட்கள் கூடுதலாக விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முன்கூட்டிய திட்டமிடலால், பள்ளி திறந்த முதல் நாளிலிருந்தே மாணவர்கள் எவ்விதத் தொய்வுமின்றி தங்களது பாடங்களைப் படிக்கத் தொடங்க முடியும் என்பதால் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.