சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் இதுவரை இல்லாத சுவாரசிய சம்பவம் ஒன்று தினம் தினம் நிலவி வருகிறது. அங்கே பல ஆண்டுகளாக வேலை பார்க்கும் ஊழியர்கள் காணாத காட்சிகள் அரங்கேற தொடங்கி உள்ளன.
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தமிழக அரசு தலைமைச் செயலகத்தில், தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் தினமும் அதிக அளவில் கூடி வருகிறார்கள். கடுமையான கூட்ட நெரிசல் காரணமாக அமைச்சர்களின் சேம்பர்களில் தள்ளுமுள்ளு மற்றும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் கூட்டத்தால் தலைமைச் செயலக வளாகமே பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் இப்போதே வார்டு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பதவிகளுக்குப் போட்டியிடும் ஆர்வம் மிகத் தீவிரமாக எழுந்துள்ளது. தங்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கவும், அமைச்சர்களின் கவனத்தை ஈர்க்கவும் கட்சி நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள், தங்கள் பகுதி மற்றும் வார்டுகளில் உள்ள பொதுமக்களைத் திரட்டி, பேருந்துகள், ரயில்கள் மற்றும் கார்கள் மூலமாக சென்னை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வருகின்றனர். முதல்வரின் தனிப்பிரிவிலோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடமோ நேரடியாக மனுக்களை அளித்தால், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்ற உறுதியின் பேரில் இந்த மக்கள் அழைத்து வரப்படுகிறார்கள். இதுமட்டுமன்றி, மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான தங்களின் சொந்த வேலைகளை முடிப்பதற்கும், கட்சியில் புதிய பதவிகளைப் பெறுவதற்கும் நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுடன் அமைச்சர்களைச் சந்திக்க தினமும் படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக, தலைமைச் செயலகத்திற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. மற்ற கட்சிகளில் இந்த வேலைகளை அதிகாலை நேரத்தில் அமைச்சர்களின் வீடுகளிலேயே மனுக்களாக கொடுத்து நிறைவேற்றுவார்கள். ஆனால் தவெக ஆட்சியில் இந்த வேலைகள் அமைச்சர்களின் வீடுகளில் செய்யப்படுகின்றன. தலைமைச் செயலகத்திற்கு எதிரே அரசுப் பணியாளர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக பிரத்யேக வாகன நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இங்கு வரும் தவெக தொண்டர்கள் அமைச்சர்களை விரைந்து சந்திக்க வேண்டும் என்ற அவசரத்தில், தங்களது வாகனங்களை கண்டபடி நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதன் விளைவாக, பணி நிமித்தமாக வெளியே சென்றுவிட்டு திரும்பும் அரசு உயர் அதிகாரிகளும், பிற சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது சொந்த வாகனங்களை எடுக்கக் கூட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்கும் மேலாக அமைச்சர்களைச் சந்திப்பதற்காகப் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் கூட்டம் அலைமோதுகிறது. அமைச்சர்களின் அறைகளுக்குள் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் நுழைய முயல்வதால், அங்கு கடுமையான நெரிசலும், ஒருவரையொருவர் முட்டித் தள்ளும் சலசலப்பான சூழ்நிலையும் நிலவி வருகிறது. இதனால் அமைச்சர்களின் அன்றாட அரசுப் பணிகளும் தொய்வடையும் சூழல் உருவாகியுள்ளது. தலைமைச் செயலகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண கூட்ட நெரிசலைக் குறைக்க அரசு அதிகாரிகள் சில முக்கிய ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர். பொதுமக்கள் தங்களின் குறைதீர்க்கும் மனுக்களை அளிக்க சென்னை வரை சிரமப்பட்டு வரத் தேவையில்லை என்றும், அமைச்சர்களின் தலைமையிலேயே அந்தந்த மாவட்டங்களில் சிறப்பு முகாம்களை நடத்தி மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் இது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.ஏன் இந்த கூட்டம்?
மற்ற கட்சி எப்படி
அமைச்சர்கள் அறைகளில் தள்ளுமுள்ளு