“அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை ரீல்ஸாக வெளியிட்டால்..” - சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் எச்சரிக்கை!

  • சென்னை: அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை ரீல்ஸாக வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Advertisement

    தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பேசுவது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தாலும், அவையும் சமூக வலைதளங்களில் பரவுவது வழக்கமாகி வருகிறது.

    Advertisement

    முன்பு, நேரலை இல்லாதபோது, அவைக்குறிப்பில் இருந்து குறிப்பிட்ட பேச்சு நீக்கப்பட்டால் என்ன பேசப்பட்டது என்பது வெளியில் தெரியாது. செய்திகளில் கூட (அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது) என்று மட்டுமே இடம்பெறும். என்ன பேசப்பட்டது என்பது குறிப்பிடப்படாது.

    ஆனால் தற்போது நேரலை என்பதால், வீடியோவை எவர் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளவும், அதனை கட் செய்து பயன்படுத்தவும் தோதான நிலை உள்ளது. இதனால் தற்போது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளும் வீடியோக்களாகவே பரவி வருகின்றன.

    இதுதொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, "ஆளும் கட்சியினர் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு வைக்கின்றனர். அதை சபாநாயகர் நீக்குகிறார். சட்டசபை வரலாற்றில், எதிர்க்கட்சியினர் பேசியதை விட ஆளும் கட்சியினர் பேசியதை, அதிகம் நீக்குவது, இதுதான், வரலாற்றில் முதல்முறை.

    Advertisement

    சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆளும்கட்சியினர், ஆச்சரியப்படும் வகையில், பதில் தருகின்றனர். பாட்டெல்லாம் பாட ஆரம்பித்துள்ளனர். நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால், சபாநாயகர் நீக்கும் வார்த்தைகள், யூ டியூப் மற்றும் சமூக வலைதளங்களில், ரீல்ஸ் ஆக பரப்பப்படுகின்றன. அதனால், சபாநாயகர் நீக்குவதற்கு, அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது.

    திமுக ஆட்சியில், தினமும், 10 கேள்விகள் எடுக்கப்பட்டன. அது, நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இப்போது சபை குறிப்பில் இருந்து, சபாநாயகர் நீக்குவது, ரீல்ஸ் ஆக பரப்பப்படுகின்றன" எனத் தெரிவித்தார்.

    அதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "சட்டசபையில் நீக்கப்பட்ட காட்சி, ஒரு மீடியாவில் ஒளிபரப்பப்பட்டதாக எதிர்க்கட்சி தரப்பில் கடிதம் தரப்பட்டுள்ளது. இது, உரிமை மீறல் குழுவிற்கு அனுப்பபட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    Advertisement

    வார்த்தைகளை நீக்குவது, எனது தனிப்பட்ட உரிமை. எல்லா பேச்சையும் நீக்குவது, எனது நோக்கம் இல்லை. சபைக்கு உதவாத, சபையின் மாண்பை குறைக்கும் வார்த்தைகளை நீக்குவேன். சபையின் கண்ணியத்தை காக்கும் வகையில், வார்த்தைகளை நீக்காமல் இருக்கும்படி, எம்.எல்.ஏக்கள் பேசவேண்டும், ஆதாரமில்லாமல் பேசுவதை தவிர்க்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

    English Summary

    Tamil Nadu Assembly Speaker JCD Prabhakar has warned that action will be taken if proceedings expunged from the Assembly records are released as Reels.