வெற்றி பயணம் திட்டம் எதிரொலி.. தனியார் பேருந்துகளிலும் இலவச பயணம்? ஓனர்கள் வைத்த ஷாக் கோரிக்கை

  • சென்னை: தமிழகத்தில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து திட்டத்தின் விரிவாக்கமாகத் தொடங்கப்பட்ட 'வெற்றி பயணம்' திட்டம், அரசுப் பேருந்துகளில் பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், இதன் மறுபக்கமாகத் தனியார் பேருந்து மற்றும் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி திருப்பத்தூரில் தனியார் பேருந்து ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

    Advertisement

    திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வி. நல்லசிவனை நேரில் சந்தித்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் (கண்டக்டர்கள்) மற்றும் மெக்கானிக்குகள் உள்ளிட்ட சுமார் 30 தனியார் பேருந்து தொழிலாளர்கள், தங்களின் குடும்ப வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

    Advertisement

    பயணிகள் கூட்டம் குறைந்ததால் காலியான தனியார் பேருந்துகள்

    கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி முதல் 'வெற்றி பயணம்' திட்டம் நடைமுறைக்கு வந்தது. ஏற்கனவே அமலில் இருந்த 'விடியல் பயணம்' திட்டத்தின் தொடர்ச்சியாக, இந்த புதிய திட்டத்தின் கீழ் எக்ஸ்பிரஸ் (Express), டீலக்ஸ் (Deluxe), லிமிடெட் ஸ்டாப் (LSS), 40 கி.மீ-க்கு மேல் இயங்கும் புறநகர் (Mofussil) மற்றும் மலைப்பாதை பேருந்துகளிலும் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்குக் கட்டணமில்லாப் பயணம் வழங்கப்பட்டு வருகிறது.

    வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய நான்கு வட மாவட்டங்களில் மட்டும் சுமார் 484 பேருந்துகள் இந்தத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    அரசுப் பேருந்துகளில் பெரும்பாலான வழித்தடங்களில் கட்டணமில்லாப் பயணம் விரிவுபடுத்தப்பட்டதால், பயணிகள் அனைவரும் அரசுப் பேருந்துகளையே நாடிச் செல்கின்றனர். இதனால் தனியார் பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு சரிந்துள்ளது.

    "8 ட்ரிப் போனா 7 ட்ரிப் காலி!" - குமுறும் ஊழியர்கள்

    "வழக்கமாக ஒரு நாளைக்கு நாங்கள் 7 முதல் 8 டிரிப் வரை செல்வோம். ஆனால், இப்போது 2 அல்லது 3 டிரிப் மட்டுமே அடிக்க முடிகிறது. அதிலும் பெரும்பாலான டிரிப்களில் பேருந்து காலியாகவே செல்கிறது. பேருந்துக்கு டீசல் போடக்கூட போதிய வசூல் ஆவதில்லை. எங்கள் தினசரி வருமானமே இந்த வசூலை நம்பித்தான் இருக்கிறது. இப்போது குடும்பச் செலவுகளைக் கூட சமாளிக்க முடியாமல் தவிக்கிறோம்" என்று வேதனையுடன் தெரிவிக்கிறார் பெயர் கூற விரும்பாத திருப்பத்தூர் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர்.

    Advertisement

    ராணிப்பேட்டையைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் சரவணன் கூறுகையில், "ஒவ்வொரு தனியார் பேருந்தையும் நம்பி குறைந்தது ஆறு ஓட்டுநர்கள், கண்டக்டர்கள் மட்டுமின்றி மெக்கானிக்குகள், எலக்ட்ரீஷியன்கள், இருக்கை தைக்கும் தொழிலாளர்கள் எனப் பல குடும்பங்கள் உள்ளன. பெண்களுக்கு இலவசப் பயணம் தருவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை; ஆனால், அரசுப் பேருந்துகளில் மட்டுமே இதைச் செய்வதால் எங்கள் வாழ்வாதாரம் மொத்தமாக முடங்கிப்போய் நிற்கிறது" என்றார்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 110 தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 220-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் கண்டக்டர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுடன் பேருந்து நிலைய புரோக்கர்கள், உதிரிபாக பழுதுபார்ப்பவர்கள் என மேலும் 60-க்கும் மேற்பட்டோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் இத்தொழிலை நம்பியுள்ளனர்.

    Advertisement

    தனியார் பேருந்து சங்கத்தின் முக்கிய கோரிக்கைகள்

    வேலூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அரசுக்குச் சில மாற்று யோசனைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது:

    அரசுப் பேருந்துகளைப் போலவே தனியார் பேருந்துகளிலும் மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு 12 சிறப்பு இருக்கைகளை ஒதுக்கத் தயாராக இருக்கிறோம். அதற்கான கட்டண இழப்பீட்டை அரசுப் பேருந்துகளுக்கு வழங்குவது போல அரசு தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

    கடந்த 2018-ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழகத்தில் தனியார் பேருந்து கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு 58 காசுகள் என்ற நிலையிலேயே நீடிக்கிறது. டீசல் விலை, உதிரிபாகங்கள் விலை மற்றும் இன்சூரன்ஸ் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால், அரசு உடனடியாகப் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும்.

    Advertisement

    ஆட்டோ ஓட்டுநர்களும் தவிப்பு

    தனியார் பேருந்துகள் மட்டுமின்றி, உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களும் இந்தத் திட்டத்தால் தங்கள் வருமானம் சரிந்துவிட்டதாகக் கூறுகின்றனர்.

    வேலூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஏழிமலை பேசுகையில், "முன்பெல்லாம் ஒரு நாளைக்கு 1,500 முதல் 2,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இப்போது வெற்றி பயணம் திட்டம் வந்த பிறகு, 600 முதல் 700 ரூபாய் கிடைப்பதே பெரிய விஷயமாகிவிட்டது. சில நாட்களில் வெறும் 300 ரூபாய்தான் தேறுகிறது. ஆனால், தினமும் டீசலுக்கு மட்டுமே 700 ரூபாய் செலவாகிறது. டீசல் விலை உயர்ந்திருக்கும் இந்த நேரத்தில், வருமானமும் போனதால் அன்றாட வாழ்க்கையை ஓட்டவே திண்டாடுகிறோம்" என வருத்தம் தெரிவித்தார்.

    மக்களுக்கான நலத்திட்டங்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும், போக்குவரத்துத் துறையை நம்பி உழைக்கும் தனியார் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அரசு உரிய மாற்று வழிகளை உருவாக்க வேண்டும் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    English Summary

    TN Vettri Payanam Scheme Hits Private Bus Operations: Workers Submit Petition