சென்னை: தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 2026 ஆம் ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார். இதில் 53 மாணவர்கள் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். ஜூலை 13 ஆம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு தொடங்குகிறது எனவும், ஜூலை 20 முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது என்றும் அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
பொறியியல் தரவரிசையில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அக்ஷிதா 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். சுமார் 2.5 லட்சம் பேர் பதிவுக் கட்டணம் செலுத்திய நிலையில் மாணவர் சேர்க்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு தரவரிசை எண் வழங்கப்பட்ட மாணவர்கள் - 1,30,767 பேர், மாணவிகள் - 1,05,246 பேர். 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 50,494 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், 2026-27 கல்வி ஆண்டிற்கான பொறியியல் படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். அவர் கூறுகையில், இந்த ஆண்டில், பொறியியல் படிப்பில் சேர்க்கை பெற விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் 2,45,235 பேர். இவர்களில் மூன்றாம் பாலினத்தவர்கள் 5 பேர் உட்பட 2,36,017 பேர் தரவரிசையில் இடம்பெற்று இருக்கின்றனர். அதே போன்று, 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 50,494 பேர் விண்ணப்பித்தனர். இதில் துறையால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 46,604 பேர் தரவரிசையில் இடம்பெற்றுள்ளனர். மாணவர்கள் தங்களது தரவரிசை பட்டியலை https://www.tneaonline.org/ என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். 53 பேர் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அக்ஷிதா என்ற மாணவி 200-க்கு 200 கட் ஆஃப் பெற்று அசத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரோஹித் பாலன் என்ற மாணவர் 2ஆம் இடமும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் என்ற மாணவர் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளார். மொத்தம் உள்ள 53 பேரில் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 39 பேர் என தெரிவித்தார். தொடர்ந்து, கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்ற விவரங்களை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார். அவர் கூறியதாவது:- முதற்கட்டமாக 7.5 இடஒதுக்கீட்டின் கீழ் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு வரும் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கலந்தாய்வானது நடைபெறும். பின்னர் இதர சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கலந்தாய்வானது நடைபெறும். பொதுப்பிரிவு பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 20 முதல் ஆகஸ்டு மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தார். மேலும் மாணவர்கள் தரவரிசை பட்டியலுக்கு விண்ணப்பித்தும், அதில் பெயர் விடுபட்டு இருந்தால் இன்று முதல் 6 நாட்களுக்குள் அதாவது 6 ஆம் தேதிக்குள் தங்கள் அருகாமையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையத்தினை அணுக வேண்டும். அங்கு தங்கள் குறைகளை பதிவு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தொலைபேசி எண் 1800-425-0110 வாயிலாகவும், tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.தரவரிசை பட்டியல் வெளியீடு
தர்மபுரி மாணவி முதல் இடம்
கலந்தாய்வு எப்போது நடைபெறும்?