சென்னை: தமிழகம் முழுவதும் மின் கணக்கீடு எடுக்கப்பட்டு தற்போது பலருக்கும் மின் கட்டண ரசீது வந்திருக்கிறது. இதில் பல வீடுகளில் மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் 15000 மின் இணைப்புகளில் சரிபார்க்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 100 மின் இணைப்புகளில் மட்டுமே வேறுபாடுகள் இருப்பதாகவும், மின்நுகர்வோர்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், மின் கணக்கீடு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்துக்கான மின் கணக்கீடு கடந்த ஜூலை மாத இறுதியில் எடுக்கப்பட்டு, நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் குறித்த தகவல் அளிக்கப்பட்டது.
தங்களுக்கு வந்துள்ள மின் கட்டணத்தை பார்த்து பொதுமக்கள் பலரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் கடந்த மாதங்களை விட இந்த மாதம் பல மடங்கு மின் கட்டணம் உயர்ந்திருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
300 ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்தப்பட்டு வந்த வீடுகளுக்கு தற்போது ஆயிரம் ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை மின் கட்டணம் வந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஜூலை மாத மின் கட்டணம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து அதிக அளவில் மின்சாரத் துறைக்கு புகார்கள் சென்றது. இதனையடுத்து மின் நுகர்வு கணக்கெட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு செய்ய தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்தது. இதற்காக மூத்த அதிகாரிகள் மூலம் மறு ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. கடந்த மே மாதம் வழங்கப்பட்ட மின் கட்டணத்துடன் ஒப்பிடும்போது ஜூன் மாத மின்நுகர்வில் அதிக மாற்றம் காணப்பட்ட சுமார் மூன்று லட்சம் மின் இணைப்புகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகஸ்டு 7ஆம் தேதி வரை ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில் தலைமை பொறியாளர் 25 இணைப்புகளையும், மேற்பார்வை பொறியாளர் 50 இணைப்புகளையும், கோட்ட பொறியாளர் 75 இணைப்புகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல துணை நிதி கட்டுப்பாட்டாளர், உதவி கோட்ட பொறியாளர், வருவாய் புலனாய்வு பிரிவு கணக்கு அலுவலர், மூத்த மதிப்பீட்டு அலுவலர், வருவாய் பிரிவு உதவி கணக்கு அலுவலர், மதிப்பீட்டு அலுவலர், உதவி பொறியாளர் என 50 முதல் 100 மின் இணைப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வின்போது தவறுகள் கண்டறியப்பட்டால் அவற்றை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரியம் கூறியிருந்தது. இதை அடுத்து தமிழக முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் 0.65% மட்டுமே மின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டான்ஜெட்கோ வெளியிட்டுள்ள விளக்கத்தில்," மின்கட்டணம் குறித்து பல தரப்பினர் சந்தேகம் எழுப்பியதை அடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் நேற்று முதல் சிறப்பு மின்னளவி மறுஆய்வு செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது. இதுவரை 15323 மின் இணைப்புகள் சரிபார்க்கப்பட்டுள்ளன. அவற்றில் 100 மின் இணைப்புகளில், அதாவது 0.65% மட்டுமே, வேறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த மின்கட்டணங்கள் திருத்தி அமைக்கப்படும். இந்தப் பணி சுமார் 3,70,000 இணைப்புகளுக்கு செய்யப்பட உள்ளது. இதனால் மின் நுகர்வோர்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது." என கூறப்பட்டுள்ளது.மின்கட்டணம்
மின் கட்டண உயர்வு
மீட்டர் ரீடிங்
டான்ஜெட்கோ