மின் கட்டணம் தாறுமாறாக எகிறியதா? இனி தவறு நடந்தால் இவர்களே பொறுப்பு.. மின் வாரியம் அதிரடி உத்தரவு

  • சென்னை: மின் கட்டணம் அதிகமாக வருவதாக சமீப நாட்களாக புகார்கள் வட்டமடித்தன. இது தொடர்பாக பல நுகர்வோர்கள் சோஷியல் மீடியாவிலும் புலம்பி, அதிருப்தி தெரிவித்தனர்.. இதற்கு பிறகு மின் வாரியம் நடத்திய ஆய்வில், பல லட்சம் வீடுகளில் தவறுதலாகக் கணக்கீடு செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, மின் வாரியத் தலைவர் அருண்ராய் ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.. அது என்ன?

    Advertisement

    தமிழ்நாட்டில் மின் பயன்பாட்டுக் கணக்கெடுப்பில் தொடரும் தவறுகளை தவிர்க்கும் வகையில் மின் வாரியம் கடுமையான புதிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.

    Advertisement

    கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட மின் கணக்கீட்டின்போது, பொதுமக்களுக்கு வழக்கத்தை விட பல மடங்கு கூடுதல் மின் கட்டணம் வந்ததாக வந்த புகார்களைத் தொடர்ந்து மின் வாரியம் தீவிர ஆய்வு மேற்கொண்டது.

    இந்த ஆய்வில் மாநிலம் முழுவதும் சுமார் 9.60 லட்சம் வீடுகளில் மின் கட்டணம் அதிகரித்து வந்ததும், குறிப்பாக 3.70 லட்சம் வீடுகளில் 3 மடங்கிற்கு மேல் கட்டணம் எகிறியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து அனைத்து நிலை அதிகாரிகளையும் கொண்டு மேற்கொள்ளப்பட்ட மறுஆய்வில், சுமார் 2 ஆயிரம் வீடுகளில் தவறாக மின் கணக்கு எடுக்கப்பட்டது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

    Advertisement

    இப்படிப்பட்ட சூழலில், எதிர்காலத்தில் இது போன்ற குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் எழாமல் இருக்க மின் வாரியத் தலைவர் அருண்ராய் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

    அதன்படி, கணக்கீட்டாளர்கள் யாரும் அலுவலகத்தில் இருந்தபடியோ அல்லது நேரில் செல்லாமலோ தோராயமாக கணக்கெடுக்கக் கூடாது என்றும், அனைத்து மின் இணைப்புகளுக்கும் நேரடியாகச் சென்று மீட்டரைப் பார்த்தே பயன்பாட்டைத் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

    ஒருவேளை முந்தைய மாதங்களைக் காட்டிலும் மின் பயன்பாடு கணிசமாக அதிகரித்திருந்தால், அந்த பகுதிக்கான கணக்கீட்டாளர்கள் உடனடியாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு அதைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    மின் பயன்பாட்டைத் துல்லியமாகக் கணக்கிடும் பணியைக் கண்காணிக்க வேண்டிய மேற்பார்வை பொறியாளர்கள், இனி இதுபோன்ற தவறுகள் ஏதேனும் நேர்ந்தால் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என மின்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமல்ல, இதுபோன்ற பிழைகள் மற்றும் தவறான நடைமுறைகளை முற்றிலும் தவிர்ப்பதற்காக, 100 சதவீதம் தானியங்கி முறையில் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்கவும் வாரியம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் முதல் மே வரையிலான காலக்கட்டங்களில் ஏற்பட்ட இதுபோன்ற தவறான கணக்கீட்டு முறைகளால் மின் வாரியத்திற்குத் தேவையற்ற அவப்பெயர் ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டே இந்த அதிரடி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணியில், இனி தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என மின் வாரியம் வார்னிங் தந்துள்ளது, நுகர்வோர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

    English Summary

    TNEB High Electricity Bill Shock.. Who Will Be Responsible If Mistakes Happen Again? New Strict Order Issued