திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்!

  • சென்னை: அரசு ஊழியர், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு ஜாக்டோ-ஜியோ கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், திமுக அரசு அறிமுகப்படுத்திய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) வரவேற்று விட்டு இப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) கேட்பதா என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGEA) கேள்வி எழுப்பியுள்ளது.

    Advertisement

    இதுதொடர்பாக அந்த அமைப்பின் மாநில தலைவர் .ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்," நேற்று வரை "டாப்ஸ்" திட்டமே தேவாமிர்தம்... அது தான் 23 ஆண்டு போராட்ட வெற்றி. அதனை நடைமுறைப்படுத்த மீண்டும் அதே ஆட்சி வர வேண்டும் என மேடையேறி புகழாரம் சூட்டியவர்களே இன்று வெட்கமே இல்லாமல் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துங்கள் என புதிய முதல்வரின் கதவைத் தட்டிச் செல்கின்றனர்.

    Advertisement

    இது, "நேற்று தீ வைத்தவன் இன்று தண்ணீர் குடம் தூக்கி ஓடுவது" போன்ற நாடகமாகும். அரசு ஊழியர்களின் நெஞ்சில் நஞ்சு ஊற்றி வைத்து, இன்று அவர்கள் கண்ணீரைத் துடைப்பவர்களாக நடிப்பது ஏமாற்றத்தின் உச்சக்கட்டமாகும்.

    அரசு ஊழியர்கள்

    அரசு ஊழியர், ஆசிரியர்கள் அரசியல் சார்பின்றி நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பது நடத்தை விதிகளின் அடிப்படை. ஆனால் சிலர் ஆட்சியாளர்களின் அரண்மனை வாசலில் நின்று பாராட்டு பாடல்கள் பாடி, இனிப்பு ஊட்டி, புகழ் மாலைகள் சூட்டி, அதிகாரத்தின் வெயிலில் நிழல் தேடியவர்கள் என்பது அரசு ஊழியர்களுக்கே நன்கு தெரியும். "கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்" போல செயல்பட்டு, ஊழியர் நலன்களை அரசியல் ஆதாயத்திற்காக விற்றவர்கள் இன்று மீண்டும் "ஊழியர் நலன்" பேசுவது என்பது "ஆட்டைக் கவ்விய ஓநாய், அதன் கண்ணீருக்கு காவலாளியாக நிற்பது" போன்ற விநோதமாகும்.

    Advertisement

    தமிழக முதல்வர்

    மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இவ்வாறான முகமூடி மனிதர்களை மிகவும் கவனமாக அடையாளம் காண வேண்டும். நேர்மையாகவும், நடுநிலையுடனும், எந்த ஆட்சியையும் அஞ்சாமல் அரசு ஊழியர்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள் யார்? அதிகாரத்திற்கு அருகில் நிற்கும் வசதிக்காக ஊழியர்களின் எதிர்காலத்தை அடகு வைத்தவர்கள் யார்? என்பதை தெளிவாக அறிந்து செயல்பட வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. எங்களது அமைப்பு, எந்த ஆட்சியிலும் உண்மையை மட்டுமே பேசியுள்ளது.

    பழைய ஓய்வூதியம்

    அதிகாரத்திற்கு முன் தலைகுனியாமல், ஊழியர்களின் உரிமைக்காக போராடிய வரலாறு எங்களுக்குண்டு. கடந்த ஆட்சியிலேயே பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பொய்யான வாக்குறுதிகள் வழங்கப்பட்டபோது, அதனை முதலில் எதிர்த்து எச்சரித்த அமைப்பு எங்களுடையதே. "டாப்ஸ்" என்ற பெயரில் புதிய சுமையை அரசு ஊழியர்களின் தோளில் சுமத்த முயன்றபோது, அது ஊழியர் விரோத திட்டம் என வெளிப்படையாக கூறியதும் நாங்களே.

    Advertisement

    அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்

    இன்று அந்த எச்சரிக்கைகள் அனைத்தும் உண்மையாகி நிற்கின்றன. புதிய முதல்வர் பொறுப்பேற்ற உடனே எங்களது அமைப்பு வாழ்த்துத் தெரிவித்ததுடன், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் நிலுவைக் கோரிக்கைகள் குறித்து நேரில் சந்தித்து பேச நேரம் கோரி மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்தது. மீண்டும் நினைவூட்டலும் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை அழைப்பு வராத நிலையில், குறிப்பிட்ட சில அமைப்புகள் மட்டும் சந்திப்பு பெற்றிருப்பது ஊழியர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.

    அரசியல்

    யார் வேண்டுமானாலும் முதல்வரைச் சந்திக்கலாம். கோரிக்கைகள் வைக்கலாம். ஆனால் "உண்மையான குரல்" யாருடையது என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். ஊழியர்களின் நம்பிக்கையை விற்றவர்கள், போராட்டங்களை அரசியல் ஏணியாக பயன்படுத்தியவர்கள், நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு பேசுபவர்கள் ஆகியோரின் வார்த்தைகளை மட்டும் நம்பி அரசு முடிவெடுத்தால், அது "கண்ணை மூடி பள்ளத்தில் இறங்குவது" போன்ற ஆபத்தான நிலையை உருவாக்கும்.

    Advertisement

    புதிய தமிழக அரசு

    எங்களது மாநில செயற்குழு கூட்டம் ஜூன் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. அதில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் நிலுவைக் கோரிக்கைகள் தொடர்பாக விரிவான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசிற்கு அனுப்பப்படும். புதிய தமிழக அரசு தூய்மையான, வெளிப்படையான, நேர்மையான ஆட்சியை வழங்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருக்கிறோம்.

    அரசு ஊழியர்

    அதே நேரத்தில், தேர்தல் காலத்தில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீதான நடவடிக்கைகள் இல்லாத நிலை ஏற்படுமானால் வழக்கம்போல் வீதிமன்றங்களில் ஜனநாயக அறவழிப் போராட்டங்களை சமரசமின்றி முன்னெடுப்போம் என்பதை தமிழக அரசிற்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்" என கூறியுள்ளார்.

    English Summary

    TNGEA questions unions demanding OPS after earlier supporting DMK government's TAPS pension scheme in Tamil Nadu.