சென்னை: TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் அடுத்த 2 மாதங்களில் வெளியிடப்படும் என்றும், முழுமையான தேர்வு முடிவுகள் வெளியாகும்போது கூடுதல் காலியிடங்கள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், 12 துணை ஆட்சியர், 2 வணிக வரி உதவி ஆணையர், 3 கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர், 8 தமிழ்நாடு பதிவு பணி மாவட்ட பதிவாளர், ஒரு தொழிலாளர் உதவி ஆணையர் என 26 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி வெளியிட்டது. அதைத்தொடர்ந்து குரூப் 1 காலி பணியிடங்களின் எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி அதிகரித்தது. இதன் மூலம் குரூப் 1 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முதலில் செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் நிர்வாகக் காரணங்களால் தேர்வு தேதி மாற்றப்பட்டு செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. அதன்படி குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய குரூப் 1 முதல்நிலைத் தேர்வு பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வுவை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இவர்களுக்காக தமிழகம் முழுவதும் 754 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் 128 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெறும் விதம், தேர்வர்களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.கே. பிரபாகர், "டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வின் முடிவுகள் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும். தேர்வுத்தாள்களின் மதிப்பீடு மற்றும் பிற நடைமுறைகள் முடிவடைந்தவுடன் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்" என்று தெரிவித்தார். மேலும், முழுமையான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரத்தில் கூடுதல் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் தற்போதைய அறிவிப்பில் இடம்பெற்றுள்ள 46 பணியிடங்களுடன் மேலும் சில பணியிடங்கள் சேர்க்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தேர்வர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறும் தேர்வர்கள் அடுத்த கட்டமான முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதனைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு நத்தப்பட்டு இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.