குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் எப்போது?” தேர்வு நடைபெறும்போதே TNPSC தலைவர் கொடுத்த அப்டேட்!

  • சென்னை: இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குருப் 2, 2 ஏ முதல்நிலை தேர்வு முடிவுகள் 2 மாதத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு நண்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத மொத்தம் 4,89,888 பேர் அனுமதிக்கப்பட்டதில் 3,97,293 பேர் தேர்வு எழுதினர். 92,595 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதாவது 81.10 சதவீதம் பேர் மட்டுமே இன்றைய தேர்வுக்கு வருகை தந்தனர்.

    Advertisement

    ஆகஸ்ட் 11ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு 821 காலிப்பணியிடங்களுக்கு வெளியானது. தொடர்ந்து, செப்டம்பர் 9 வரை விண்ணப்பம் பெறப்பட்டது. அதன் பின்னர், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, 846ஆக உயர்த்தப்பட்டது. அதன்படி, இத்தேர்வின் மூலம் குரூப் 1 பதவிகளில் 43 காலிப்பணியிடங்களும், குரூப் 2 பதவிகளில் 803 காலிப்பணியிடங்களும் நிரப்பப்படுகிறது.

    உதவி தொழிலாளர் ஆய்வாளர், சார்-பதிவாளர், துணை வணிக வரி அதிகாரி, தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், நன்னடத்தை அலுவலர், துணை பதிவாளர், ஜெயிலர், மூத்த வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்கள் இந்த குரூப் 2, 2 ஏ தேர்வுகள் வாயிலாக நிரப்பப்பட உள்ளன.

    Advertisement
    TNPSC குரூப் 2 தேர்வு எழுதச் சென்ற வனக் காப்பாளர் பலி.. அந்தியூரில் சோகம்!

    தமிழகம் முழுவதும் உள்ள 1,647 மையங்களில் இன்று தேர்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 173 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. முன்னதாக, பலத்த பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கொண்டு செல்லப்பட்டன. இன்றைய தேர்வு மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுபவர்கள், அடுத்ததாக முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலை தேர்வுகளுக்கான முடிவுகள் இரண்டு மாதத்தில் வெளியிடப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    TNPSC Chairman Prabhakar has stated that the results for the TNPSC Group 2 and 2A preliminary examinations, held today, will be released in two months.