வரவு எட்டணா.. செலவு பத்தணா! ஒரு எக்ஸாம் நடத்த டிஎன்பிஎஸ்சிக்கு எவ்வளவு செலவு? முழு டேட்டா இதோ!

  • சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2021 முதல் 2025 வரை டிஎன்பிஎஸ்சியின் வரவு செலவு குறித்த தகவல்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிவந்துள்ளது. சுருக்கமாக சொல்லப் போனால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலம் அந்த அமைப்புக்கு 54 கோடி வரவும், 319 கோடி ரூபாய் செலவும் ஏற்பட்டிருக்கிறது.

    Advertisement

    தமிழகத்தில் அரசு பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி செயல்பட்டு வருகிறது. ஏஓ முதல் ஆர்டிஓ வரை குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

    Advertisement

    அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர், இளநிலை நிர்வாகி, வனக் காவலாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் காலியாக உள்ளது. இந்த காலிப் பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

    டிஎன்பிஎஸ்சி

    துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய பதவிகளுக்கு குரூப் 2 மூலமும், உதவியாளர், தணிக்கை ஆய்வாளர், முழுநேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், நேர்முக எழுத்தர், கணக்கர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் குரூப் 2 ஏ மூலமும் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், இந்திய ஆட்சிப் பணிக்கு அடுத்ததாக குரூப்-1 பதவிகள் கருதப்படுகிறது.

    Advertisement

    வரவு செலவு

    அதில், துணை கலெக்டர், உதவி வணிகவரி ஆணையர், உதவி இயக்குனர், துணை சரக பதிவாளர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை அலுவலர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் ஒன் மூலம் நிரப்பப்படுகிறது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சியின் வரவு செலவு குறித்த தகவல்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டு பெறப்பட்டுள்ளது.

    தகவல் உரிமை சட்டம்

    கடந்த 5 ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சிக்கு வரவாக 54 கோடி ரூபாயும், செலவாக 319 கோடி ரூபாயும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2021 ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து 2025 அக்டோபர் 31ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி எவ்வளவு வருவாய் திரட்டியது என்பது குறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்துள்ள டிஎன்பிஎஸ்சி, இந்த ஐந்து ஆண்டு காலத்தில் நடத்தப்பட்ட பல்வேறு தேர்வுகள் மூலமாக 54 கோடியே 91 லட்சத்து 56 ஆயிரத்டுஹ் 915 ரூபாய் தேர்வு மற்றும் விண்ணப்ப கட்டணமாக பெறப்பட்டுள்ளது.

    Advertisement

    ரூ. 319 கோடி செலவு

    2020-2021 முதல் 2025-2026 வரையிலான 6 நிதியாண்டுகளில் தேர்வு நடத்துவது, போக்குவரத்து உள்ளிட்ட செலவினங்களுக்காக 319 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிற.து அதே நேரத்தில் அந்த காலகட்டத்தில் பணி நியமனம் பெற்ற தேர்வர்கள், ஆண், பெண், திருநங்கைகள் எண்ணிக்கை, போலி சான்றிதழ் சமர்ப்பித்து சிக்கியவர்கள் பற்றிய விவரங்கள் தனியாக பராமரிக்கப்படவில்லை எனவும் டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.

    தமிழக அரசு

    இந்த தொகையை பார்க்கும் போது கிட்டத்தட்ட ஒரு தேர்வு நடத்தினால் வருவாயை விட 6 மடங்கு செலவாகிறது. அதாவது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி ஒரு தேர்வு நடத்துவதற்கு 300 ரூபாய் செலவு செய்தால் 50 ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது இதற்காக ஆண்டுதோறும் ஏற்படும் கூடுதல் செலவை தமிழக அரசு ஏற்று கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    English Summary

    RTI data reveals TNPSC’s examination expenses far exceeded application and examination fee collections over recent years.