நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பணிகளையும் டிஎன்பிஎஸ்சியே நிரப்பும்.. தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சி

  • சென்னை: நகரப்புற உள்ளாட்சி அமைப்பு பணியிடங்கள் தற்போது வரை நேரடி நியமன முறையில் நிரப்பப்பட்டு வரும் நிலையில், இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என சட்டசபையில் அமைச்சர் சரத்குமார் அறிவித்துள்ளார். அதாவது, அமைச்சர் தாக்கல் செய்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய டிஎன்பிஎஸ்சி (கூடுதல் செயல்பணிகள்) சட்டத் திருத்த மசோதா நேற்று சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

    Advertisement

    அமைச்சரின் இந்த அறிவிப்பு தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சியினை கொடுத்துள்ளது. டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடைபெற்றால் நேர்மையாக நடைபெறும் என்றும் தகுதியானவர்களுக்கு பணிகள் கிடைக்கும் என்பதும் போட்டி தேர்வர்களின் கருத்தாக உள்ளது.

    Advertisement

    டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப

    தமிழக சட்டசபையில் நேற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய டிஎன்பிஎஸ்சி (கூடுதல் செயல்பணிகள்) சட்டத் திருத்த மசோதாவை மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் தாக்கல் செய்தார். அந்த மசோதாவில், "மிகவும் திறமையான தொழில்முறை சார்ந்த மற்றும் வெளிப்படையான ஆட்சேர்ப்பு செயல்முறையை உறுதி செய்வதற்காக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள பதவிகளுக்கு தகுதியானவர்களை நியமிப்பதற்கான ஆள்சேர்ப்பு முறையை சீராக அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

    இதன் படி மாநிலத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள இளைஞர்களும் இதுபோன்ற பணியிடங்களில் வேலைவாய்ப்பை பெற முடியும். எனவே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (கூடுதல் செயல்பணிகள்) சட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள பதவிகளுக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்யும் பணியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் கூடுதல் பணியாக ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக இந்த சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    மசோதா நிறைவேறியது

    அமைச்சர் சரத்குமார் தாக்கல் செய்த இந்த மசோதா நேற்று எம்எல்ஏக்களின் குரல் வாக்கெடுப்பின் மூலமாக நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் தேர்வர்கள் பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஆளுநர் ஒப்புதல் அளித்தால் இந்த மசோதா சட்ட வடிவம் பெறும். அதன்பிறகே நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பணிகளுக்கும் ஆட்சேர்ப்பு நடைமுறையை டிஎன்பிஎஸ்சி எடுக்க முடியும்.

    நகரப்புற உள்ளாட்சி அமைப்பு பணியிடங்கள் தற்போது வரை நேரடி நியமன முறையில் நடைபெற்று வந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி மூலம் நடைபெற்றால் நேர்மையாக நடைபெறும் என்றும் தகுதியானவர்களுக்கு பணிகள் கிடைக்கும் என்பதும் போட்டி தேர்வர்களின் கருத்தாக உள்ளது.

    English Summary

    TNPSC: Minister Sarathkumar has announced in the Legislative Assembly that vacancies in urban local bodies—which were previously filled through direct recruitment—will henceforth be filled through the TNPSC. The Tamil Nadu Public Service Commission (TNPSC) (Additional Functions) Amendment Bill, introduced by the Minister, was passed in the Assembly yesterday via a voice vote.