TNPSC: இப்படியே போச்சுனா குரூப் 4-ல் 1,000 பணியிடம் தான் வரும்.. குரூப் 2 அறிவிப்பால் தேர்வர்கள் குமுறல்

  • சென்னை: தேர்வர்கள் பலரும் எதிர்பார்த்த குரூப் 2, 2 ஏ அறிவிப்பு நேற்று வெளியானது. பலரும் 2 ஆயிரத்திற்கும் மேல் பணியிடங்கள் வரும் என எதிர்பார்த்தனர். ஆனால் வெறும் 821 பணியிடங்களை நிரப்ப மட்டுமே அறிவிப்பு வெளியானது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணியிடங்களானது குறைக்கப்பட்டுள்ளதாகவும், இப்படியே போனால் குரூப் 4 தேர்வுக்கு ஆயிரம் பணியிடங்கள் தான் அறிவிப்பு வரும் என குமுறுகின்றனர்.

    Advertisement

    டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தேர்வு அறிவிப்பு நேற்று வெளியானது. இதில் வெறும் 821 பணியிடங்களுக்கு மட்டுமே அறிவிப்பு விடப்பட்டது தேர்வர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 6 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதால், சில ஆயிரங்களில் காலியிடங்கள் எண்னிக்கை இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்த தேர்வர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    Advertisement

    15 ஆண்டுகளில் இல்லாத குறைவு

    இதைத் தொடர்ந்து குரூப் 2, 2ஏ காலியிடங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி அறிவிக்க வேண்டும் என்று துறை அமைச்சர் சர்த்குமார் மற்றும் முதல்வர் விஜய்க்கு தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். குரூப் 2, 2 ஏ தேர்வுக்கு காலிப்பணியிடங்கள் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவாக இருப்பதாக போட்டி தேர்வு பயிற்சியாளர் நடராஜ் என்பவரும் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்த காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2011-ஆம் ஆண்டு 6,631 காலியிடங்கள் அதிமுக ஆட்சி காலத்தில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியிருந்தது. கொரோனா காலத்தில் கூட 3 ஆயிரம் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியானது. கடந்த திமுக ஆட்சியில் கூட ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் வெளியிடப்பட்டன. கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு சரியாக நடைபெறவில்லை. காலிப்பணியிடங்களும் குறைவானது.

    Advertisement

    குரூப் 4 பணியிடம் 1,000 தான் வரும்

    இதனால், ஆட்சி மீது டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் 40 லட்சம் தேர்வர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரு மாற்றம் வேண்டும் என்று தவெகவிற்கு வாக்களித்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு குரூப் 1 தேர்வுக்கு வெறும் 26 காலியிடங்களுக்கு அறிவிப்பு விடப்பட்டுள்ளது. இதுவரைக்கும் இப்படி அறிவிப்பு வெளியானது இல்லை. இதற்கு அறிவிப்பு வெளியிடாமலே இருக்கலாம்.

    கடந்த 15 வருடங்களில் 2014-ல் ஒரு தடவை மட்டும் 17 காலியிடங்களுக்கு அறிவிப்பு விடப்படட்து. மற்றபடி குரூப் 1 தேர்வுக்கு 70 க்கு குறையாமல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகும். 70 - 200 வரைக்கும் கடந்த 15 வருடங்களில் குரூப் 1 தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் வெறும், 26 இடங்களுக்கு அறிவிப்பு விட்டு இருக்கிறீர்கள். இதே நிலை போனால், குரூப் 4-ல் 1,000, 1,500 தான் வரும்.

    Advertisement

    முதல்வர் விஜய்யின் பதில் என்ன?

    6 லட்சம் காலியிடங்கள் இருக்கும் பொழுது, காலிப்பணியிடங்கள் எங்கே போனது. விஜய் கடந்த ஆண்டு மதுரை மாநாட்டில் பேசும் போது, அவுட் சோர்சிங்கில் நாங்கள் பணியிடங்களை நிரப்ப மட்டோம். முழு பணியிடமும் டிஎன்பிஸ்சி முலம் நிரப்புவோம் என்று சொன்னார். இன்று சட்டமன்றத்தில் சவுமியா அன்புமணி, மின்சாரத்துறை உள்ளிட்டவற்றில் அவுட்சோர்சிங் முறையில் ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக குற்றச்சாட்டு வைக்கிறார். அதற்கு முதல்வர் விஜய்யின் பதில் என்ன?

    6 லட்சம் காலியிடங்கள் யாருக்காக விட்டு வைத்து இருக்கிறீர்கள். தேர்வே ஒழுங்காக நடத்துவது இல்லை. வினாத்தாள் சரியாக எடுப்பது இல்லை. எனவே, இதில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு குறைந்தது 5 ஆயிரம் காலிப்பணியிடங்கள் குரூப் 2-க்கு அறிவிக்க வேண்டும் என்று மாணவ மாணவிகள் கோரிக்கை வைக்கிறார்கள்" என்றார்.

    English Summary

    TNPSC: The notification for the Group 2 and 2A exams, eagerly awaited by many aspirants, was released yesterday. While many had expected over 2,000 vacancies, the announcement of only 821 posts has caused deep disappointment among the candidates. They are voicing their frustration, noting that the number of vacancies has dropped to a level unseen in the last 15 years and fearing that, at this rate, the notification for the Group 4 exam might announce only a thousand posts.