சென்னை: தமிழக வெற்றிக் கழக கொடியில் இடம்பெற்றுள்ள சிவப்பு, மஞ்சள் வண்ணங்களில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் TNSTC செயலி மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வென்று, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. கடந்த மே 10 ஆம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்றார் ஜோசப் விஜய். விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
முக்கியமாக முந்தைய திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. போக்குவரத்து துறையை பொறுத்தவரை பழைய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு புதிதாக பேருந்துகளை கொள்முதல் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், புதிய பேருந்துகளுக்கு தமிழக வெற்றி கழக கொடி நிறத்தில் வண்ணம் அடிக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. அரசுப் பேருந்துகள் ஏற்கனவே பச்சை, நீலம் மற்றும் சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது, மஞ்சள், சிவப்பு ஆகிய வண்ணங்கள் பூசப்படுவதாகத் தெரிகிறது. இந்நிலையில் தமிழக அரசின் போக்குவரத்து கழக செயலியான டிஎன்எஸ்டிசி செயலியும் தமிழக வெற்றி கழக கொடி வண்ணத்தில் மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய பயணிகள் முன்பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட டிஎன்எஸ்டிசி செயலி, தவெக கட்சி கொடி நிறங்களில் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக வெள்ளை நிறத்தில் இருந்த செயலி, தற்போது சிவப்பு, மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. சிவப்பு, மஞ்சள் நிறத்தில் இடது பக்கம் முதல்வர் ஜோசப் விஜய் புகைப்படமும் வலது பக்கம் போக்குவரத்து கழக லோகோவும் இடம்பெற்றுள்ளது. தவெக கட்சிக் கொடி நிறத்தில் TNSTC ஆப் மாற்றப்பட்டுள்ளதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன. மஞ்சள் நிறத்தில் எழுத்துகள் இடம்பெற்றுள்ளதால் சரியாகப் பார்க்க முடியவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. மாற்றம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த தவெக, திட்டங்களின் பெயர்களையும், இப்படி நிறங்களையும் மட்டுமே மாற்றி வருகிறது என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.