முதலில் சங்கர் ஜிவால்.. இப்போது சுனில் குமார்.. தமிழக மாஜி டிஜிபிக்கள் அடுத்தடுத்து விலகல்! பின்னணி

  • சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் தான் முன்னாள் டிஜிபிக்கள் தாங்கள் வகித்த பொறுப்புகளில் இருந்து அடுத்தடுத்து ராஜினாமா செய்து அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். இன்று காலையில் சங்கர் ஜிவால் ராஜினாமா செய்த நிலையில் தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் பதவியை சுனில் குமார் ராஜினாமா செய்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (Tamil Nadu Uniformed Services Recruitment Board or TNUSRB) என்பது போலீஸ், சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் பிரிவிற்கான ஆட்சேர்ப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. இதன் தலைமைஅலுவலகம் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ளது.

    Advertisement

    இதன் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபியான சுனில் குமார் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் முதல் இந்த பொறுப்பில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் திடீரென்று சுனில் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கூறி அவர் கடிதம் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் அவரது ராஜினாமாவின் பின்னணி குறித்த காரணம் எதுவும் வெளியாகவில்லை. பதவியை ராஜினாமா செய்த சுனில் குமார் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். கடந்த 1988ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான இவர் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் சென்னையில் போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையராக செயல்பட்டார். அப்போது பசுமை வழித்தடம் ஏற்பாடு செய்து உடல் உறுப்புகளை கொண்டு சென்று பாராட்டு பெற்றவர்.

    Advertisement

    கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி சுனில் குமார் டிஜிபியாக பணி ஓய்வு பெற்றார். தமிழ்நாடு காவல் துறையின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு டிஜிபியாக சுனில் குமார் செயல்பட்டபோது அவர் ஓய்வு பெற்றார். அதன்பிறகு 3 ஆண்டுகள் கழித்து அவர் தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் இன்னும் மீதமிருக்கும் நிலையில் சுனில் குமார் இன்று ராஜினாமா செய்துள்ளார்.

    முன்னதாக முன்னாள் தமிழக டிஜிபியான சங்கர் ஜிவால் தமிழ்நாடு தீயணைப்பு ஆணையத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
    அதேபோல் ஆணையத்தின் உறுப்பினர்களான விக்ரமன், சத்தியமூர்த்தி மற்றும் நமச்சிவாயம் ஆகியோரும் ராஜினாமா செய்தனர்.கடந்த ஆண்டு சங்கர் ஜிவால் ஓய்வு பெற சில மணிநேரம் இருந்தபோது புதிதாக தீயணைப்பு ஆணையம் உருவாக்கி அதன் தலைவராக நியமனம் செய்து முந்தைய திமுக அரசு உத்தரவு பிறப்பித்தது.

    Advertisement

    இவர்கள் 2 பேரும் ராஜினாமா செய்ததற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும் திமுக அரசு இவர்களுக்கு இந்த பொறுப்புகளை வழங்கிய நிலையில் தற்போது ஆட்சி மாற்றத்தால் அவர்கள் விலகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் விஜய் முதல்வரான பிறகு ஒரே நாளில் முன்னாள் டிஜிபிக்கள் சங்கர் ஜிவால் மற்றும் சுனில் குமார் ஆகியோர் அடுத்தடுத்து முக்கிய பதவிகளை ராஜினாமா செய்துள்ளதால் அந்த பொறுப்புகளில் புதியவர்களை நியமனம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

    English Summary

    TNUSRB Chairman Resigned: Following a change of government in Tamil Nadu, TVK leader Joseph Vijay has assumed office as Chief Minister. Amidst this development, former DGPs have been resigning from their respective posts one after another, causing a stir. After Shankar Jiwal resigned this morning, Sunil Kumar has now stepped down as the Chairman of the Tamil Nadu Uniformed Services Recruitment Board.