விரைவில் டோல்கேட்டுகள் இல்லாத இந்தியா.. பிப்ரவரியில் நடக்கும் மாற்றம்.. நிதின் கட்கரி அறிவிப்பு

  • சென்னை: இந்தியாவில் விரைவில் டோல்கேட்டுகள் முற்றிலும் இல்லாத நிலைக்கு மாறவுள்ளது. வாகனங்கள் டோல் பிளாசாக்களில் நிற்பதைத் தவிர்க்கவும், எரிபொருள் விரயத்தைக் குறைக்கவும் மற்றும் டோல் நிர்வாகச் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் இந்திய அரசு 'மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ' என்ற தடையற்ற டிஜிட்டல் டோல் முறையைக் கொண்டுவர உள்ளது. வரும் பிப்ரவரி மாதத்திற்குள் இந்தச் சிறப்பு முறை பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பாஸ்டேக் முறை மூலமாக காத்திருப்பு நேரம் பெருமளவில் குறைக்கப்பட்டு, ரொக்கப் பணப் பரிவர்த்தனைகள் நீக்கப்பட்டுள்ளன. இதன் அடுத்தகட்டமாக, வாகனங்கள் டோல்கேட்களில் சிறிதும் நிற்காமல் நேரடியாகச் செல்லும் வகையில் இந்த புதிய தொழில்நுட்பம் அமைக்கப்பட உள்ளது

    Advertisement

    இந்தியாவில் டோல்கேட்களில் தினமும் கோடிக்கணக்கான வாகனங்கள் நின்று செல்வதால், நேரம் வீணாகிறது, எரிபொருளும் அதிகமாக செலவாகிறது.. அதனால் ஏற்படும் நெரிசல் காரணமாக எரிபொருள், நேரவிரயமும் ஏற்படுகிறது. இதுதவிர டோல் நிர்வாகச் செலவுகளும் அதிகமாகவே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு புதிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, முழுமையாக டிஜிட்டல் முறையிலான மற்றும் தடைகளற்ற டோல் வசூல் அமைப்பை நோக்கி இந்தியா நகர்ந்து வருகிறது. பிப்ரவரி மாதத்திற்குள் 'மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ' முறை டோல் பிளாசாக்களில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

    Advertisement

    'குளோபல் ஃபின்கெக் ஃபெஸ்ட்' நிகழ்வில் பேசிய மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, "பாஸ்டேக் முறை ஏற்கனவே காத்திருப்பு நேரத்தை பெருமளவில் குறைத்து, டோல் பிளாசாக்களில் ரொக்கப் பணம் மற்றும் சில்லறை தேவையை நீக்கி, கட்டணம் வசூலிக்கும் முறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. எனவே அடுத்தகட்டமாக, வாகனங்கள் டோல் பிளாசாக்களில் சிறிதும் நிற்கத் தேவையில்லாத நிலையை உருவாக்குவது தான் இலக்கு.

    முன்பு டோல் பிளாசாக்களில் 12 நிமிடங்கள் வரை நீடித்த காத்திருப்பு நேரம், சில இடங்களில் 30 நிமிடங்கள் வரை இருந்த நிலை மாறி, பாஸ்டேக் வருகைக்குப் பிறகு 80-90% வரை குறைந்துள்ளது. இப்போது எஞ்சியுள்ள தாமதத்தையும் தவிர்க்க மத்திய அரசு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது.

    Advertisement

    காத்திருப்பு நேரம் குறைந்ததால் கணிசமான பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள் கிடைத்துள்ளது. வேகமான டோல் வசூல் மூலம் ஆண்டுக்கு 71 கோடி மணிநேரம் மிச்சப்படுத்தப்படுவதாக மதிப்பிடப்படுகிறது. மேலும் இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ₹68,500 கோடி பொருளாதார சேமிப்பு கிடைக்கும். வாகனங்கள் சிக்னலிலும் டோல்கேட்டிலும் சும்மா இயங்குவது ற்றும் எரிபொருள் விரயமாவது குறைந்ததன் மூலம் கிடைத்த சுற்றுச்சூழல் நன்மையை, சுமார் 2.7 கோடி மரங்களை நட்டதற்குச் சமம்.

    பாஸ்டேக் முறையிலிருந்து தடைகளற்ற டோல் வசூல் நோக்கி

    இந்தியாவின் டிஜிட்டல் போக்குவரத்து உள்கட்டமைப்பில் பாஸ்டேக் ஒரு முக்கியமான அங்கமாகும். ஆனால் மத்திய அரசு இந்த அமைப்பை மேலும் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறது. 'மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ' முறையின் கீழ், வாகனங்கள் எந்தப் பௌதிகத் தடைகளிலும் நிற்காமல் டோல் புள்ளிகளைக் கடந்து செல்ல முடியும். இந்த முறை பிப்ரவரிக்குள் அறிமுகப்படுத்தப்படும் , இது டோல் பிளாசாக்களின் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டுச் செலவைக் குறைக்க உதவும.

    Advertisement

    நெடுஞ்சாலைக் கட்டணங்களை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கவும் அரசு செயல்பட்டு வருகிறது. பாஸ்டேக் அமைப்பில் அனைத்து வங்கிகளும் பங்கேற்கும். இந்த முறை மேலும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாறும். மக்கள் ரொக்கப் பணப் பரிவர்த்தனையில் இருந்து டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளது போல் இதிலும் நிலைமை மாறும். கடந்த காலத்தில், டோல் கட்டணம் செல்லுத்தும் போது சிறிய தொகைகளுக்கு சில்லறைக்கு பதிலாக சாக்லேட்டுகள் கொடுக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு. டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் அந்தப் பழக்கம் முற்றிலும் மறைந்து, வாகன ஓட்டிகள் துல்லியமான தொகையை மின்னணு முறையில் செலுத்த முடிகிறது.

    கமெர்ஷியல் அல்லாத தனிநபர் வாகனங்களுக்காக அரசாங்கம் ஆண்டு பாஸ் முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதைய திட்டத்தின் கீழ், வாகன ஓட்டிகள் ₹3,000 செலுத்தி 200 டோல் பிளாசாக்களில் கட்டணமில்லாப் பயணிக்க முடிகிறது. பாஸ்டேக் முறையை இன்னும் பரவலாகப் பயன்படுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்குச் சுமார் ₹20,000 - ₹25,000 கோடி வரை கூடுதல் ஆதாயம் கிடைக்கும். டிஜிட்டல் அமைப்புகள், புதுமை மற்றும் ஆராய்ச்சிகள் மூலமே இந்த நன்மைகள் கிடைக்கும்.

    Advertisement

    டோல் வசூலில் ஃபின்கெக் வாய்ப்புகள்

    பாஸ்டேக், வாகனப் பதிவுகள், காப்பீடு மற்றும் வங்கி அமைப்புகள் ஒன்றுடன் ஒன்று அதிகளவில் இணைக்கப்படுவதால், டிஜிட்டல் டோல் முறையின் விரிவாக்கம் ஃபின்கெக் நிறுவனங்களுக்குப் பெரிய வாய்ப்பை உருவாக்குகிறது. பாஸ்டேக், வாஹன் வாகனத் தரவுத்தளம், காப்பீடு மற்றும் வங்கிச் சேவைகளை பரந்த டிஜிட்டல் மொபிலிட்டி சுற்றுச்சூழல் அமைப்பின் முக்கியமான விஷயங்களாக இருக்கிறது. அதேவேளையில், தொழில்நுட்பம் மட்டுமே போதுமானது கிடையாது.

    இந்தியா தனது டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்கி வரும் வேளையில், தொழில்நுட்பத் திறன் மற்றும் ஆதாரங்களைப் போலவே நம்பிக்கை, தெளிவு மற்றும் நல்லெண்ணம் ஆகியவையும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். டோல் சந்தையில் அதிகப் போட்டி இருக்க வேண்டும் , இந்தத் துறைக்குள் மேலும் பலர் நுழைந்து சேவையின் தரத்தை உயர்த்த வேண்டும். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தடையின்றி நடக்கும், டோல் புள்ளிகளில் வாகனங்கள் நிற்கவே தேவையில்லாத, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளைத் தரும் ஒரு நவீன நெடுஞ்சாலை அமைப்பை உருவாக்குவதே மத்திய அரசின் நோக்கம்" இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.

    English Summary

    Union minister Nitin Gadkari said India is moving towards fully digital and eventually barrier-free tolling, with a multi-lane free flow (MLFF) system expected to be operational at toll plazas by February as the government seeks to eliminate stoppages, cut fuel consumption and reduce the cost of toll operations.