விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி முதல் பாடலூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திருத்தப்பட்ட கட்டணத்தின்படி வசூலிக்கப்படும் என திருச்சி டோல்வே பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை எண் 38-ல், கிலோமீட்டர் 192.250 முதல் 285.000 வரையிலான உளுந்தூர்பேட்டை-பாடலூர் பிரிவில், செங்குறிச்சி மற்றும் திருமாந்துறை ஆகிய இரு சுங்கச்சாவடிகளில் இந்த புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையமான NHAI-யின் ஒப்புதலுடன், செப்டம்பர் 1, 2026 அன்று அதிகாலை 12 மணி முதல் திருத்தப்பட்ட சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கார், பயணிகள் வேன் மற்றும் ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு முறை பயணத்திற்கான கட்டணம் 70 ரூபாயாகவும், ஒரே நாளில் பலமுறை பயணம் செய்வதற்கான கட்டணம் 105 ரூபாயாகவும், மாதாந்திர பாஸ் கட்டணம் 2,125 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலகுரக வர்த்தக வாகனங்களுக்கு ஒரு முறை பயணத்திற்கு 125 ரூபாய், ஒரே நாளில் பலமுறை பயணத்திற்கு 185 ரூபாய், மாதாந்திர பாஸ் கட்டணம் 3,715 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. லாரி மற்றும் பேருந்துகளுக்கு ஒரு முறை பயணத்திற்கு 250 ரூபாய், ஒரே நாளில் பலமுறை பயணத்திற்கு 370 ரூபாய், மாதாந்திர பாஸ் கட்டணம் 7,435 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இரண்டு அச்சுகளுக்கு குறைவான பல அச்சு வாகனங்களுக்கு ஒரு முறை பயணத்திற்கு 400 ரூபாய், ஒரே நாளில் பலமுறை பயணத்திற்கு 595 ரூபாய், மாதாந்திர பாஸ் கட்டணம் 11,950 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண அறிவிப்பால் உளுந்தூர்பேட்டை-பாடலூர் வழித்தடத்தில் தினசரி பயணிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் வர்த்தக வாகன உரிமையாளர்களிடையே கூடுதல் செலவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கார் பஸ் லாரி போன்ற வாகனங்களுக்கு சுங்க சாவடி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. செப்டம்பர் 1, 2026 முதல் புதிய சுங்கக் கட்டணம் நடைமுறைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் சுங்கச்சாவடியை சுற்றி 20 கிமீ சுற்றளவில் வசிக்கும் மக்கள், மாதாந்திர பாஸ் பெற முடியும். அவர்களுக்கு கட்டணம் மாதம் 350 ரூபாய் என்கிற அளவில் தான் இருக்கும். சற்றே கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். இந்த பாஸ் மூலம் அவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் ஒரு மாதத்தில் பயணிக்க முடியும். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி என்பது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மிக முக்கியமான சுங்கச்சாவடி ஆகும். இந்த சுங்கச்சாவடியை கடந்து தான், திருச்சி வழியாக மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் செல்ல வேண்டும். அதேபோல் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டல மக்களுமே இந்த சுங்கச்சாவடியை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த சுங்கச்சாவடிகளில் எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும். கட்டணமும் சற்றே அதிகம் தான். இந்த சூழலில் புதிதாக கட்டணம் உயர்த்தப்படுவதால், சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கவலையும் எழுந்துள்ளது.