கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம்

  • சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் மூதாட்டிகளைக் குறிவைத்து நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளும், அத்துமீறல்களும் அதிர்ச்சியூட்டும் வகையில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சென்னையின் புளியந்தோப்பு, வேளச்சேரி மற்றும் திருப்பூரைத் தொடர்ந்து தற்போது கடலூரிலும் 93 வயது பாட்டிக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. பாதுகாப்பு இல்லாத நிலையில் தனியாக இருக்கும் மூதாட்டிகளின் பலவீனத்தைப் பயன்படுத்தி வக்கிர புத்தியைக் காட்டும் இத்தகைய குற்றவாளிகள் மீதான கடுமையான சட்ட நடவடிக்கைகள் தேவை என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது.

    சென்னையின் இதயப் பகுதியான புளியந்தோப்பு பட்டாளம், கே.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்த 76 வயது மூதாட்டி அல்லிராணி என்பவருக்கு, சில நாட்களுக்கு முன்பு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கி விட்டது.

    தனியாக வசித்து வரும் பாட்டி

    கணவரை இழந்த நிலையில் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்த தாய்க்கு, அவரது மகள் கீதா அடிக்கடி நேரில் வந்து தேவையான பணிவிடைகளை செய்து கவனித்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் சம்பவத்தன்றும் அம்மாவைப் பார்க்க கீதா வீட்டிற்கு வந்துள்ளார்.

    அப்போது அல்லிராணி அணிந்திருந்த நைட்டி முற்றிலும் கிழிந்த நிலையில், அவர் மிகுந்த மன அதிர்ச்சியோடு அமர்ந்திருந்ததைக் கண்டு மகள் பதறிப்போனார். பதற்றத்துடன் என்ன நடந்தது என்று தாயிடம் கேட்டுள்ளார். ஆனால் வயது முதிர்வு மற்றும் ஏற்பட்ட பயம் காரணமாக அல்லிராணியால் எதையும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.

    இதனால் குழம்பிப்போன மகள், அம்மாவைத் தேற்றி குளிக்க வைப்பதற்காக வீட்டிற்குள் அழைத்துச் சென்ற. போதுதான், தாயின் உடலில் நகக்காயங்களும், ரத்தக் கசிவுகளும் இருப்பதை கண்டு கீதா உறைந்து போனார்.

    கிழிந்த நைட்டி - உடம்பில் காயங்கள்

    பிறகு அன்பாகவும் பேசி என்ன நடந்தது என்று கேட்டுள்ளார்.. அதே தெருவை சேர்ந்த மருது என்கிற மருதப்பன் (56) என்பவர், வீட்டிற்குள் புகுந்து மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்ததை அறிந்து கொந்தளித்து போனார். உடனடியாக இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு, பதுங்கியிருந்த குற்றவாளி மருதப்பனை போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

    இதேபோல் கடந்த வாரம் சென்னை வேளச்சேரி 100 அடி சாலை பூங்காவில் வழக்கம்போல நடைப்பயிற்சி மேற்கொண்ட 61 வயது மூதாட்டி ஒருவரை, போதையில் வந்த 5 பேர் கொண்ட இளைஞர் கும்பல் தனியாகக் குறிவைத்து கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. இந்த பயங்கர தாக்குதலால் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் அலறித் துடித்து மயங்கி விழுந்த மூதாட்டியை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர், கடலூர் கொடுமை

    இந்த சம்பவம் குறித்து அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன், 2 குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்தனர்.. நேற்றைய தினமும் திருப்பூரில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த 75 வயது மூதாட்டி உட்பட அடுத்தடுத்து பல மூதாட்டிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வக்கிர புத்தி கொண்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.

    இப்படி அடுத்தடுத்து அரங்கேறும் இந்த கொடூரங்களின் தொடர்ச்சியாக, தற்போது கடலூரிலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கடலூர் மஞ்சக்குப்பம் பேரப்பன்குட்டை பகுதியைச் சேர்ந்த 50 வயது ஜெயச்சந்திரன் என்பவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று மதியம் கடலூர் ஆல்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அங்கு 93 வயது மூதாட்டி ஒருவர் தனியாக இருப்பதை அறிந்து, அவரிடம் வக்கிரமாகப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மூதாட்டி மரண பயத்தில் கூச்சலிட்டு அலறியுள்ளார்.

    பாலியல் தொல்லை அதிகரிப்பு

    மூதாட்டியின் அலறல் சத்தத்தைக் கேட்டு, பக்கத்து வீட்டில் இருந்த அவரது உறவினர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்து பார்த்தனர். அவர்கள் வருவதைக் கண்ட பெயிண்டர் ஜெயச்சந்திரன், பிடிபடாமல் இருக்க அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.

    இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டியின் தரப்பில் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் கடலூர் புதுநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு, தலைமறைவாக இருந்த குற்றவாளி ஜெயச்சந்திரனை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் தொடர்ந்து மூதாட்டிகளுக்கு எதிராக அரங்கேறும் இத்தகைய பாலியல் வக்கிரங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதோ சிங்கப்பெண் படை வந்தாச்சு

    தொடர்ந்து அரங்கேறும் இத்தகைய கொடூரங்கள், இளம்பெண்களுக்கு மட்டுமல்லாமல் நம் வீட்டுப் பாட்டிகளுக்கும் தகுந்த பாதுகாப்பு தேவை என்பதை ஆணித்தரமாக உணர்த்துகின்றன..

    இந்த இக்கட்டான சூழலில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இன்று தொடங்கப்பட்டுள்ள "சிங்கப்பெண் படை" திட்டம் மூதாட்டிகளின் பாதுகாப்பிற்கும் அரணாக விளங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் நம் தாய்மார்களை வக்கிரக் காம மிருகங்களிடமிருந்து காக்க, இத்திட்டத்தின் மூலம் காவல்துறை இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே அரசுக்கு நாம் முன்வைக்கும் கோரிக்கையாகும்..!!

    English Summary

    Torn Nightgown.. A Daughter Broke Down While Bathing Her Mother.. The Disturbing Abuse That Reaches Even a 93-Year-Old Grandmother