ரயிலில் இரவு 10 முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்க அனுமதி.. விதிகளை ரத்து செய்ய மறுத்த ஐகோர்ட்

  • சென்னை: முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பயணிகள் படுக்கையில் தூங்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ரயில்வே விதிமுறை நியாயமானது என்றும் அனைத்து பயணிகளின் வசதியையும் கருத்தில் கொண்டே இந்த விதி இருப்பதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பயணிகள் ரயில்களை பயன்படுத்துகிறார்கள். படுத்து கொண்டே போகலாம், டாய்லெட் வசதி உள்ளிட்டவை காரணமாகவே பயணிகள் ரயில்களை தேர்வு செய்கிறார்கள்.

    Advertisement

    ரயில் பெட்டிகள்

    ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகளில் அனைத்து பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு சில விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பயணிகள் படுக்கையில் தூங்க அனுமதி உள்ளது. மற்ற நேரங்களில் லோவர் மற்றும் மிடில் பெர்த் பணிகள் அமர்ந்து கொண்டு தான் பயணிக்க வேண்டும். வேறு ஆப்ஷன் இல்லை.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும், ரயில்வே விதிமுறை நியாயமானது என்றும் அனைத்து பயணிகளின் வசதியையும் கருத்தில் கொண்டே இந்த விதி இருப்பதாகவும் கூறிய ஐகோர்ட், இந்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், இந்த நேரக் கட்டுப்பாட்டை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

    Advertisement

    சலுகைகள்

    அதேநேரம் நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மட்டும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் தூங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு சக பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    ரயில்வே விதிகளுக்கு எதிராக சென்னை சேர்ந்த பி. பாலசுப்பிரமணியன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தபோது நீதிமன்றம் இந்தக் கருத்தை தெரிவித்தது. கடந்த 2017 ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மூலம் இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டது. அதை எதிர்த்தே இந்த வழக்கை பாலசுப்பிரமணியன் தொடர்ந்து இருந்தார்.

    ரத்து செய்ய மறுப்பு

    மனுதாரர் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர். ஒருமுறை உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது மனைவியுடன் ரயிலில் பயணம் செய்தபோது, அவரை அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து படுக்கையில் தூங்க சக பயணிகள் அனுமதிக்கவில்லை என்று மனுவில் தெரிவித்திருந்தார். ரயில்வே விதிகளில் நோய்வாய்ப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், சக பயணிகள் ஒத்துழைக்காததால் அந்த விதிகள் பயனற்றதாக இருப்பதாக அவர் கூறினார். எனவே, இந்த நேர கட்டுப்பாடு அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

    Advertisement
    சென்னையிலிருந்து நினைத்து கூட பார்க்க முடியாத வேகத்தில் ரயில்.. கோவை வழியாக திருவனந்தபுரம் போகலாம்

    பொதுநலன்

    இந்த வாதத்தை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு, மூன்று அடுக்கு ரயில் பெட்டிகளில் அனைத்து பயணிகளின் வசதியையும் கருத்தில் கொண்டே இந்த நேர கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டதாக கூறியது. குறிப்பாக மிடில் பெர்த் மற்றும் அப்பர் பெர்த் ஒதுக்கப்பட்ட பயணிகள் பகல் நேரத்தில் அமர்வதற்கு இடம் தேவைப்படுகிறது. எனவே, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்குவதற்கும், மீதமுள்ள நேரத்தில் கீழ்ப்படுக்கைகளை அமர்வதற்கு பயன்படுத்துவதற்கும் இந்த நடைமுறை வழிவகுக்கிறது. இதன் மூலம் அனைத்து பயணிகளும் ஒருவருக்கொருவர் இடையூறு இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்று நீதிமன்றம் விளக்கியது.

    Advertisement

    மேலும் விதிமுறையில் நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் தூங்குவதற்கான சலுகை இருப்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதுபோன்ற பயணிகளுக்கு மற்றவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. எனவே, ஒரு குறிப்பிட்ட பயணத்தின்போது நோய்வாய்ப்பட்ட நபரை சக பயணிகள் கூடுதல் நேரம் தூங்க அனுமதிக்காததை மட்டும் வைத்து, விதிமுறையை மொத்தமாக ரத்து செய்ய முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    English Summary

    Madras High Court has dismissed a plea challenging the railway rule that allows passengers to sleep on reserved train berths only(ரயிலில் தூங்கும் விதிகள்): Train Sleeping Rules latest news in tamil.