சென்னை: சட்டசபையில் மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. நேற்றைய நிகழ்வில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை கொடுத்தார். அப்போது திமுக மீதும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு புகார்களை குறிப்பிட்டார். மிசா காலத்தை ஒப்பிட்டு ஸ்டாலினை விஜய் உருவகேலி செய்தது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் ஸ்டாலின் முகத்தில் இருப்பது ஒரு போராளியின் வீரத்தழும்பு என டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.
இதுகுறித்து திமுக ஐடி விங் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டிஆர்பி ராஜா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முகத்தில் இருப்பது வெறும் தழும்பு அல்ல! அதிகார வெறியில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த அவசரநிலைக் காலத்தில், மிசா சிறையில் அடக்குமுறையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட ஒரு போராளியின் வீரத்தழும்பு அது!
சிறைவாசமும் அடக்கு முறையும் தந்த அந்தத் தழும்புக்குப் பின்னால் இருப்பது, ஜனநாயகத்திற்காக அவர் ஏற்றுக்கொண்ட வலி, எதற்கும் அஞ்சாத ஒரு போராளியின் மகத்தான அரசியல் வரலாறு. ஒரு ஜனநாயக விபத்தில் இன்று முதலமைச்சர் ஆன நடிகர் ஜோசப் விஜய் போன்றவர்கள் என்றென்றும் எட்ட முடியாத அரசியல் வரலாற்று பெருஞ்சிகரத்தை எட்டியதற்கான அடையாளம்தான் நம் தலைவரின் அந்தத் தழும்பு! ஜனநாயகம் காக்கும் போராளியாக உறுதியுடன் நின்று, அடக்குமுறையில் பெற்ற காயத்தையே கேலி செய்வது அருவருப்பான அற்பத்தனம்! சர்வாதிகாரத்தை எதிர்த்து தலைவர் பெற்ற காயங்களுக்கு வரலாறு விழுப்புண் என்று பெயர் சூட்டும்! அந்தத் தழும்பு தலைவருக்கு அவமானமல்ல, பெருமிதம். தமிழ்நாட்டை காக்க அவர் சிந்திய இரத்தத்தின் அடையாளம். தியாக வரலாற்றை உணரத் தெரியாத அரசியல் அறிவற்றவர்களின் கேலிச் சிரிப்புதான் அழிக்க முடியாத அவமானத் தழும்பு" என்று கூறியுள்ளார். மிசா தொடர்பான வீடியோவும் பதிவுடன் இணைத்துள்ளார். அதில் மிசா குறித்தும், ஸ்டாலின் கைது நடவடிக்கை குறித்தும் மூத்த அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் கூறிய கருத்துகளும் இடம்பெற்றுள்ளது. ராஜா பகிர்ந்துள்ள பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.உங்களுக்கு அவமான தழும்பு