ரீல்ஸ் கும்பல் அரசு” ஆபத்தில் தமிழகம்! முதலீடுகள் பறிபோகும் அபாயம்! டேட்டாவோடு வந்த டிஆர்பி ராஜா!


  • சென்னை: எதற்கெடுத்தாலும் ஆறு மாதம் அவகாசம் வேண்டும் என்று கூறும் அரசு, முதலில் தொழில் முதலீட்டை ஈர்ப்பது என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். முந்தைய திமுக அரசை குற்றம்சாட்டும் ஆர்வத்தில், தமிழகத்தின் நற்பெயரையே களங்கப்படுத்தும் வேலையில் தற்போதைய அரசு ஈடுபட்டுள்ளது என்று முன்னாள் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் முதலீடுகள் வெளியேறியதாகவும், சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வேறு மாநிலங்களுக்கு சென்றுவிட்டதாகவும் தற்போதைய அமைச்சர் கீர்த்தனா அரசு குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் டிஆர்பி ராஜா விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    அதில், "முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் தமிழகத்தை விட்டு வெளியேறின என்ற அரசின் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. இது பொருளாதாரம் குறித்தும், முதலீட்டு ஊக்குவிப்பு குறித்தும் எந்தப் புரிதலும் இல்லாததையே வெளிப்படுத்துகிறது.

    டிஆர்பி ராஜா

    அந்த முதலீடுகள் இயல்பாகவே குஜராத்துக்கு செல்லவில்லை. மத்திய அரசால் திட்டமிட்டு தமிழகத்திலிருந்து திசைதிருப்பப்பட்டன. இதுகுறித்து நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திலேயே எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து குரல் எழுப்பினார். ஆனால் அந்த உண்மையை மறைத்து விட்டு திமுக மீது பழி சுமத்துவது, தமிழக நலன்களை விட பாஜக தலைமையிலான மத்திய அரசின் நலன்களுக்கே தற்போதைய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வாகன உற்பத்தி நிறுவனங்களின் முதலீட்டு முடிவுகள் குறித்து அரசு தவறான தகவல்களை பரப்புகிறது.

    Advertisement

    தொழில் முதலீடு

    பல ஆண்டுகளாக கர்நாடகாவில் பெரிய அளவில் முதலீடு செய்து வரும் நிறுவனங்கள், தற்போது மகாராஷ்டிராவில் முதலீடு செய்வதாக அறிவித்திருப்பது புதிய விஷயம் அல்ல. அந்த முடிவு தற்போதைய ஆட்சி பொறுப்பேற்ற பிறகே அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் உண்மைத் தரவுகளுடன் பதிலளிக்க முடியும். தொழில் முதலீடுகளை ஒருபோதும் அரசியலாக்கக்கூடாது என்பதே திமுக அரசின் நிலைப்பாடு . தொழில்துறை அமைச்சராக இருந்த காலத்தில் பல விமர்சனங்களை சந்தித்தபோதும், முதலீட்டாளர்களை சங்கடப்படுத்தும் வகையில் ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை.

    உலக முதலீட்டாளர்கள்

    கடந்த சில நாட்களாக பல தொழில் நிறுவன தலைவர்கள் நேரடியாக என்னை தொடர்புகொண்டு பேசினர். தற்போதைய அரசின் பிரதிநிதிகள் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதம் மற்றும் பொதுவெளியில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர். உலக முதலீட்டாளர்கள் முன் தமிழகம் சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு 12.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்தது. அதன் மூலம் 36 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இதை நாடே அறிந்திருக்கிறது.

    Advertisement

    முதலீட்டு மாநாடு

    முதலீட்டு ஒப்பந்தங்கள் மட்டுமல்லாமல் அவற்றை நடைமுறை முதலீடுகளாக மாற்றுவதற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக 'முதலீட்டு மாற்ற மாநாடு' நடத்தப்பட்டதாகவும், அதில் முதலீட்டு முன்னேற்றம் தொடர்பான முழுமையான தரவுகள் வெளியிடப்பட்டது. 2016 முதல் 2021 வரை இருந்த அதிமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்தன. ஆனால் திமுக ஆட்சியில் 12.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் வந்தன. இது முந்தைய காலகட்டத்தை விட ஐந்து மடங்கு அதிகம். திராவிட மாடல் அரசு தொடர்ந்திருந்தால் தற்போதைய சுற்றில் குறைந்தபட்சம் 25 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை தமிழகம் பெற்றிருக்கும்.

    Advertisement

    முக ஸ்டாலின்

    மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் சாதனைகளை மிஞ்ச முடியாவிட்டாலும், அதன் அரை அளவாவது சாதித்துக் காட்டுங்கள். தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறுவதற்குப் பதிலாக முடிவுகளை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். உலகளவில் முதலீடுகளுக்கான போட்டி கடுமையாக உள்ள நிலையில், அரசியல் பழிவாங்கும் நோக்கில் முதலீட்டு சூழலை பாதிப்பது தமிழகத்திற்கே இழப்பை ஏற்படுத்தும்.

    ரீல்ஸ் மாடல் அரசு

    திமுகவை அவதூறுகளால் பாதிக்க முடியாது. ஆனால் முதலீட்டு ஊக்குவிப்பு முயற்சிகள் தொடர்ந்து களங்கப்படுத்தப்பட்டால், அதன் பாதிப்பை சந்திப்பது தமிழக வளர்ச்சிதான். புதிய முதலீட்டு வாய்ப்புகள் அண்டை மாநிலங்களுக்கு சென்று விடும் அபாயம் உள்ளது. ரீல்ஸ் மாடல் அரசின் முடிவற்ற குற்றச்சாட்டுகளும், பாதியறிவு அரசியலும் தமிழகத்திற்கு எந்த பயனும் தராது. குற்றச்சாட்டுகளை நிறுத்திவிட்டு, மக்களுக்கு பலன் தரும் ஆட்சியை வழங்குவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்" என கூறியுள்ளார்.

    English Summary

    TRB Rajaa rejects investment diversion claims, says DMK attracted ₹12.5 lakh crore investments and 36 lakh jobs.