முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக


  • சென்னை: தமிழக அரசியல் களம், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் அதிரடி கட்சித் தாவல்களால் பரபரத்து காணப்படுகிறது.. குறிப்பாக, அடுத்தடுத்து அரங்கேறிய விக்கெட் வீழ்ச்சிகளால் 2 பெரும் திராவிடக் கட்சிகளும் நிலைகுலைந்து நிற்க, புதிய ஆளுங்கட்சியான த.வெ.க தனது பலத்தை 112 ஆக உயர்த்த வியூகம் வகுத்து வருகிறது. இந்த அதிரடி அரசியல் சூழலுக்கு மத்தியில், ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்கால நகர்வை தீர்மானிக்கப் போகும் அந்த 5 தொகுதி இடைத்தேர்தல் களம் குறித்த சில பரபரப்புகள் இப்போதே கிளம்ப தொடங்கிவிட்டன.

    Advertisement

    தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகும் மாநில அரசியல் களம், கொஞ்சமும் தணியாத கொந்தளிப்பில் காணப்படுகிறது.. எப்போதுமே பொதுத்தேர்தல் முடிந்தவுடன் அரசியல் கட்சிகளுக்கிடையே நிலவும் பரபரப்பு சற்று ஓய்வது வழக்கம்தான்.

    Advertisement

    2 திராவிட கட்சிகள்

    ஆனால் இந்த முறை தமிழகத்தில் அரங்கேறியுள்ள எதிர்பாராத தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் அதிர்வுகளும் ஒட்டுமொத்த உள்கட்சி கட்டமைப்புகளையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளன.

    அதுவும் தமிழகத்தின் 2 பெரும் பாரம்பரியக் கட்சிகளான திமுக, அதிமுக இரண்டுமே இந்த தேர்தல் தோல்வியால் கடுமையான உள்காயங்களை சந்தித்து நிற்கின்றன. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிமுக உள்கட்சிப் பூசலால் இரண்டு பிரிவுகளாக உடைந்தது.. பிறகு தற்காலிகமாக ஒன்றிணைந்தாலும், அக்கட்சியின் உள்ளே நிலவும் மனக்கசப்புகளும் அதிகார போட்டிகளும் இன்னமும் புகைந்துகொண்டே இருக்கின்றன.

    அதிமுக கட்சி தாவல்கள்

    இப்படியொரு இக்கட்டான சூழலில்தான், அதிமுகவில் கட்சித் தாவல்களும் அரங்கேறியது. அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மதுராந்தகம் தனித் தொகுதி மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி ஜெயக்குமார், தாராபுரம் தனித் தொகுதி சத்யபாமா மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா ஆகிய 4 முக்கிய நிர்வாகிகள் தங்களின் பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்தனர்.

    Advertisement

    பதவிகளைத் துறந்த கையோடு, அவர்கள் தங்களை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெகவில் இணைத்து கொண்டதை அதிமுக வட்டாரத்தையே நிலைகுலைய செய்து விட்டது.. அதுவும் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களில் இன்னும் யார் யார் தவெக பக்கமாக போக போகிறார்களோ? என்ற சந்தேகமும், பயமும் அதிமுக மேலிடத்துக்கு இருக்கவே செய்கிறது.

    தவெக அசுர வளர்ச்சி

    அதிமுக இப்படி சொந்த பலத்தை இழந்து தவிக்க, தவெகவின் இந்த அசுர வளர்ச்சியால் திமுகவோ, தன்னுடைய கூட்டணி கட்சிகளையே இழந்து தவிக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளது.. இந்த சூழலுக்கு மத்தியில்தான், தமிழகத்தில் காலியாகியுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் மிக விரைவில் சூடுபிடிக்க உள்ளது.

    Advertisement

    திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், மதுராந்தகம், பெருந்துறை மற்றும் தாராபுரம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு எந்த நேரத்திலும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் திருச்சி கிழக்கு தொகுதியானது, முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. அவர் பெரம்பூர் தொகுதியைத் தன் வசம் வைத்துக்கொண்டு திருச்சி கிழக்கை ராஜினாமா செய்ததால் இந்த இடைத்தேர்தல் அத்தியாவசியம் ஆகியுள்ளது.

    திமுக அதிர்ச்சி

    இப்போதைய நிலவரப்படி தவெகவுக்கு சட்டமன்றத்தில் 107 உறுப்பினர்கள் பலம் உள்ளது. வரவிருக்கும் இந்த 5 இடைத்தேர்தல்களிலும் அக்கட்சி வெற்றி பெற்றால் அதன் தனி நபர் பலம் 112 ஆக உயரும். மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கூட்டணிக் கட்சிகளின் தடையில்லா ஆதரவு ஏற்கனவே இருப்பதால், இந்த 5 தொகுதிகளையும் கைப்பற்றி அடுத்த 5 ஆண்டுகால ஆட்சியை எவ்வித சலனமுமின்றி தக்க வைத்துக் கொள்ள த.வெ.க மிகத் தீவிரமாகத் திட்டமிட்டு வியூகங்களை வகுத்து வருகிறது.

    Advertisement

    இன்னொருபுறம், இழந்த தங்களின் அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்க இந்த இடைத்தேர்தலை ஒரு அரிய வாய்ப்பாக திமுக கருதுகிறது. 5 தொகுதிகளிலும் தங்களின் சொந்த வேட்பாளர்களைக் களம் இறக்க தி.மு.க தலைமை தீர்க்கமான முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

    5 தொகுதி தேர்தல்

    கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கும், தொண்டர்களின் சோர்வை நீக்குவதற்கும் இந்த இடைத்தேர்தல் களம் மிக முக்கியமானது என்பதால், அடிமட்ட நிர்வாகிகள் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை தி.மு.க தலைமை தொடர்ந்து கருத்துக்களைக் கேட்டு வருகிறது. இந்த 5 தொகுதிகளிலும் கணிசமான வெற்றியைப் பெற்றால் மட்டுமே திமுகவின் உண்மையான வலிமையை தற்போதைய அரசியல் சூழலில் நிரூபிக்க முடியும் என்பதால், வேட்பாளர் தேர்வில் மிகுந்த எச்சரிக்கையுடனும், பலப்பரீட்சை நடத்தும் நோக்கிலும் திமுக இறங்கியுள்ளது.

    Advertisement

    ஆனால் அதிமுகவின் நிலைமையோ டோட்டலாக மாறுபட்டுள்ளது.. தொடர் தோல்விகள் மற்றும் அடுத்தடுத்து அரங்கேறும் உட்கட்சிப் பிரச்சினைகளால், இந்த 5 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடலாமா அல்லது வேண்டாமா என்ற பெரும் குழப்பத்திலேயே அக்கட்சியின் தலைமை ஆழ்ந்துள்ளதாம்.

    நாம் தமிழர் கட்சி, பாஜக

    ஒருவேளை மீண்டும் தோல்வியை சந்திக்க நேர்ந்தால், அது தொண்டர்களிடையே பெரும் தொய்வை ஏற்படுத்துவதுடன், கட்சியில் மீண்டும் ஒரு பெரிய பிளவை உருவாக்கிவிடுமோ என்ற அச்சம் தலைமையை உலுக்கி வருகிறது. இதன் காரணமாக, தேர்தலைப் புறக்கணிப்பது குறித்து அதிமுக தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

    இவர்களுடன் நாம் தமிழர் கட்சி, பாஜக ஆகியவையும் இந்த இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் உத்திகள் குறித்துத் தங்களின் உள்கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளன. இதனால் தமிழக அரசியல் களத்தில் இடைத்தேர்தல் பரபரப்பு இப்போதே பற்றிக்கொண்டுள்ளது.

    ஆக மொத்தம் தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிக உக்கிரமான, முக்கோணப் போட்டி நிறைந்த ஒரு வாழ்வா-சாவா போராட்டமாகவே இந்த இடைத்தேர்தல் களம் அமையும் என்று தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

    English Summary

    Triangular Political Battle in Tamil Nadu! Is Vijay Closing in on 112? DMK Making a Comeback… AIADMK in Tension