திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்!

  • சென்னை: திருச்சி கிழக்கு தொகுதியில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. அதற்கேற்ப அதிமுகவில் இருந்து வந்தவர்களை தவெக கைவிடாது என்று அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் உறுதி கொடுத்துள்ளார். இவர் 2016ஆம் தேதி சட்டசபைத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். இதனால் மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக பேச்சுகள் அடிபடுகிறது.

    Advertisement

    சட்டசபைத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் புதிய வரலாற்றை உருவாக்கி இருக்கிறது. தவெகவின் எழுச்சி காரணமாக அதிமுகவில் இருந்து சாரை சாரையாக பலரும் அக்கட்சியின் இணையத் தொடங்கி இருக்கின்றனர். ஏற்கனவே அதிமுகவின் சிட்டிங் எம்எல்ஏ-க்களான இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினர்.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ், அண்ணா தொழிற்சங்க பேரவை மாநிலச் செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் தவெகவில் இணைந்தனர். இவர்களை அமைச்சரும், தவெக பொதுச்செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் வரவேற்றார். ஓபிஎஸ் திமுகவில் இணைந்த போதும் கூட வெல்லமண்டி நடராஜன் அதிமுக பக்கமே நின்றார்.

    ஆனாலும் சட்டசபைத் தேர்தலில் வெல்லமண்டி நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த வெல்லமண்டி நடராஜன், தற்போது தவெகவில் ஐக்கியமாகி இருக்கிறார். இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெல்லமண்டி நடராஜன் போட்டியிடக் கூடும் என்று திருச்சி மாவட்டத்தில் பேச்சுகள் அதிகரித்துள்ளது.

    Advertisement

    ஏற்கனவே 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்ட வெல்லமண்டி நடராஜன் 21,894 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையிலும் இடம்பெற்றார். 2021 தேர்தலில் தோல்வி அடைந்தாலும், இதே தொகுதியில் இவருக்கு இன்னும் தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது.

    அதற்கேற்ப புஸ்ஸி ஆனந்த் பேச்சும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தவெக-வில் புதிதாக இணைபவர்களிடம் எந்தவித பாகுபாடும் காட்டப்படாது; பழைய நிர்வாகிகளுடன் இணைந்து அவர்கள் பணியாற்ற வேண்டும். மாற்றுக் கட்சியில் இருந்து இணைந்தவர்களை தவெக கைவிடாது என்று புஸ்ஸி ஆனந்த் பேசியிருந்தார்.

    திருச்சி கிழக்கு தொகுதியில் முதலில் கு.பா.கிருஷ்ணன் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் அவருக்கு திடீரென நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. இதனால் வெல்லமண்டி நடராஜன் இந்த தொகுதியில் போட்டியிடக் கூடும் என்ற பேச்சுகள் அதிகரித்துள்ளது. இருப்பினும் முதல்வர் விஜய்யின் முடிவே இறுதியானதாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

    English Summary

    Trichy East: Buzz Grows Over TVK Fielding Former Minister Vellamandi Natarajan in the Trichy East by election After Bussy Anand's Assurance