சென்னை: அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையே கையெழுத்தாகியுள்ள அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வர வேண்டுமானால், சவுதி அரேபியா இஸ்ரேல் நாட்டை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தொழில்நுட்ப உதவியுடன் சவுதி அரேபியாவில் அணுமின் நிலையங்களை அமைப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தம் நிறைவேற வேண்டுமானால், சவுதி அரேபியா 'ஆபிரகாம் உடன்படிக்கையில்' (Abraham Accords) இணைய வேண்டும் என்பதை டிரம்ப் நிபந்தனையாக முன்வைத்துள்ளார்.
சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், இந்த அணுசக்தி ஒப்பந்தம் முற்றிலும் ராணுவ பயன்பாட்டிற்கு அப்பாற்பட்ட, மக்கள் பயன்பாட்டிற்கான மின் உற்பத்திக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சவுதி அரேபியா சொந்தமாக யுரேனியம் செறிவூட்ட அனுமதி கிடையாது. மேலும், சவுதி அரேபியா ஆபிரகாம் உடன்படிக்கையில் இணைவதை பொறுத்தே இந்த ஒப்பந்தத்திற்கு இறுதி ஒப்புதல் அளிக்கப்படும்" என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சவுதி தலைவர்களுடன் நடந்த முந்தைய பேச்சுவார்த்தைகளிலேயே அதிபர் டிரம்ப் இந்த நிபந்தனையை தெளிவாக எடுத்துரைத்துள்ளார். ஆபிரகாம் உடன்படிக்கையில் இணையவில்லை என்றால் இந்த அணுசக்தி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்" என்று உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க எரிசக்தி துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே பல பில்லியன் டாலர் மதிப்பிலான அணு பயன்பாட்டிற்கு வழி வகுக்கும். இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் சவுதி அரேபியாவின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய அணு உலைகளைக் கட்ட உதவும். அதே சமயம் சவுதி அணு ஆயுத பரவலை தடுக்கும் வகையில் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும். சொந்தமாக யுரேனியத்தை செறிவூட்டி அணு ஆயுதம் தயாரிக்கும் ஆபத்தைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டிரம்பின் இந்த அறிவிப்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வரவேற்றுள்ளது. சவுதி அரேபியா ஆபிரகாம் உடன்படிக்கையில் இணைவது மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரு வரலாற்றுப் பாய்ச்சலாக இருக்கும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த ஒப்பந்தம் குறித்து சில பாதுகாப்பு வல்லுநர்களும் அரசியல் விமர்சகர்களும் கவலை தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கில் ஏற்கெனவே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், சவுதிக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்குவது எதிர்காலத்தில் அணு ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். சவுதி அரேபியா இதுவரை தனி பாலஸ்தீன நாடு அமைக்கப்பட்டால் மட்டுமே இஸ்ரேலை அங்கீகரிப்போம் என்ற வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருந்தது. டிரம்பின் இந்த நிபந்தனைக்கு சவுதி அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக பதில் அளிக்கவில்லை. இந்த அணுசக்தி ஒப்பந்தம் இறுதி ஒப்புதலுக்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட உள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் டிரம்பின் குடியரசுத் கட்சி பெரும்பான்மை வகிப்பதால், இந்த ஒப்பந்தம் எளிதில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஒப்பந்தத்தின் பின்னணி மற்றும் நிபந்தனைகள்
அணுசக்தி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
இஸ்ரேல் மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்வினை
அடுத்தகட்ட நகர்வு என்ன?