4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன்

  • சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வார காலத்தில் நடைபெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    Advertisement

    இச்சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று தவெக தலைவரும், முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    டிடிவி தினகரன் காட்டம்

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், "மதுரையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை, வேலூரில் செங்கல் சூளைகளில் பணம் கேட்டு மிரட்டல், தாம்பரம் அருகே கூலித் தொழிலாளியிடம் இலவசமாக செங்கல், ஜல்லி கேட்டு தாக்குதல், செங்கல்பட்டு அருகே நகைக்காக மூதாட்டி கொலை என கடந்த ஒரு வாரத்தில் நடைபெற்ற இந்த நான்கு சம்பவங்களுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை அக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள் என்பது தான்.

    இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர்கள் தான் தவெகவில் நிறைந்திருக்கிறார்களா? அல்லது ஆளுங்கட்சி என்ற மமதையில் இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட துணிகின்றனரா? என்பதை தவெக தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய் அவர்கள் விளக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    சம்பவங்களின் பின்னணி

    டிடிவி தினகரன் தனது பதிவில் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடந்த நான்கு முக்கியக் குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்:

    மதுரை சிறுமி விவகாரம்: மதுரையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்த வழக்கில் தவெக நிர்வாகி ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது.

    வேலூர் மிரட்டல் விவகாரம்: வேலூர் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் ஆளுங்கட்சி நிர்வாகி என்ற பெயரில் சிலர் பணம் கேட்டு மிரட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தாம்பரம் வன்முறை: தாம்பரம் அருகே கூலித் தொழிலாளி ஒருவரிடம் இலவசமாகச் செங்கல், ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்களைக் கேட்டு, தராமல் மறுத்ததால் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    செங்கல்பட்டு கொலை: செங்கல்பட்டு பகுதியில் நகைக்காக மூதாட்டி ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் தவெக நிர்வாகியின் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

    கடும் விமர்சனங்கள்

    தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே சட்டம்-ஒழுங்கு நிலவரம் மற்றும் ஆளுங்கட்சியினரின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நபர்கள் மீது தமிழகக் காவல்துறை மற்றும் தவெக தலைமை என்ன மாதிரியான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது? முதலமைச்சர் ஜோசப் விஜய் இதற்கு என்ன பதில் அளிக்கப் போகிறார்? என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் அமையும்.

    English Summary

    AMMK General Secretary TTV Dhinakaran has leveled severe allegations, claiming that functionaries of the ruling party—the TVK were involved in various criminal incidents that occurred across Tamil Nadu over the past week.