“ஆளுங்கட்சி என்ற மமதையில் ஆட்டம்? முதல்வர் விஜய் ஆக்‌ஷன் எடுப்பாரா?” டிடிவி தினகரன் கேள்வி!

  • சென்னை: "ஆளுங்கட்சி என்ற மமதையில் தவெகவினர் சிலர் அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதும், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது. கட்சிக்காரர்களின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் ?" என முதலமைச்சர் விஜய்க்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    ஜோசப் விஜய் தலைமையில் தவெக ஆட்சியமைத்துள்ள நிலையில், தவெக கட்சி நிர்வாகிகளின் அலப்பறைகள் எல்லை மீறுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தென்காசி மேற்கு மாவட்ட தவெக மருத்துவ அணி செயலாளர் வாசுதேவி தலைமையிலான குழுவினர், அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    எவ்வித அரசு பொறுப்புகளிலும் இல்லாத தவெக கட்சியினர் எந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்கிறார்கள்.. யார் இவர்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது? முதலமைச்சர் விஜய் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தவெகவினரின் செயலுக்கு பல தரப்புகளில் இருந்தும் கண்டனங்கள் குவிகின்றன.

    அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு அலுவலகங்களிலும் மருத்துவமனைகளிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தவெகவினர் - மக்கள் நலனுக்காக இயங்கும் துறைகளில் ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் கடும் கண்டனத்திற்குரியது.

    தென்காசி மாவட்டத்தில் தவெக மருத்துவர் அணி எனும் பெயரில் சிலர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆய்வு நடத்தியதாகவும், தவெக மாவட்டச் செயலாளர் எனும் பெயரில் சிலர் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    ஆளுங்கட்சி என்ற மமதையில் தவெகவினர் சிலர் அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதும், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.

    அரசு அலுவலகங்களில் முறையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் அரசின் நிர்வாக அமைப்பு இருக்கும்போது ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்? முதலமைச்சரின் பதவி ஏற்பு விழாவில் "யார் தவறு செய்தாலும் அவர்கள் என்னோடு இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களை விடவே மாட்டேன்" என்று சூளுரைத்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், அரசு அலுவலகங்களில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தனது கட்சிக்காரர்களின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் ?

    Advertisement

    மேலும் ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு அலுவலகங்களும், பொதுமக்கள் கூடும் இடங்களும் படப்பிடிப்புத் தளங்களாகவே மாறி வருவதாகப் பொதுமக்களே குற்றம் சாட்டுகின்றனர்.

    ஆளும் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் என்ற போர்வையில் முதலமைச்சர் அறையில் நடக்கும் விவாதங்களும், முதலமைச்சரின் புகழ் பாடுவதற்காகப் பொதுமக்களுக்கு இடையூறு செய்து Insta Reels -களாக எடுத்து வெளியிடுவதே தவெக அரசின் சாதனையாகவும் டிரெண்டாகவும் மாறியுள்ளது.

    எனவே, விளம்பரம் என்பது வேறு மக்கள் பணி என்பது வேறு என்பதை முதலமைச்சரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய் அவர்கள் தனது கட்சி தொண்டர்களுக்கு உணர்த்திடுவதொடு, அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் தவெகவினரின் அதிகார துஷ்பிரயோகத்தை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    “The conduct of certain TVK members—who, emboldened by the arrogance of being the ruling party, conduct surprise inspections in government offices, issue directives to officials, deserves strong condemnation. Why has no action been taken against these party members thus far?” AMMK General Secretary TTV Dhinakaran has questioned Chief Minister Vijay.