சென்னை: தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அதற்கடுத்த வாரமான இன்று முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருப்பதன் மூலம், வாரத்திற்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு தான் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
மத்திய உள்துறை அமித்ஷா தலைமையில் இன்று நடந்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில், 'மக்களவையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாததை சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும்' என தமிழக முதல்வர் விஜய் பேசியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடந்த அனைத்து எம்.பி. க்கள் கூட்டத்தில், 'தொகுதி மறுசீரமைப்பே கூடாது. தற்போது உள்ள 543 என்ற எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது' என தவெக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை மாற்றவே கூடாது, 543 என்ற எண்ணிக்கை நிரந்தரமாக்கப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது தவெக அரசு. இந்நிலையில், மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாததை சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும் என மட்டுமே முதல்வர் விஜய் இன்று பேசியுள்ளார். இதன் மூலம் தொகுதி மறுவரையறை பிரச்சனையில் No Delimitation என்ற தனது நிலைப்பாட்டில் இருந்து, அந்தர் பல்டி அடித்து Fair Delimitation என்ற நிலைப்பாட்டிற்கு முதல்வர் விஜய் மாறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமா? தமிழகத்தின் தலையாய பிரச்சனைகளைத் திசைதிருப்ப சட்டமன்றத்தில் தவெக அரசு நடத்திய "தீர்மான நாடகம்" அம்பலமாகியுள்ளது. சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மக்களவையில் குறையாமல் இருப்பதை சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். ஆகஸ்ட் 8 ஆம் தேதி தவெக தோழமைக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தையும், அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 12 ஆம் தேதி சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தையும் நிறைவேற்றிய முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், ஒரே வாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியிருப்பது முற்றிலும் முரண்பாடாக அமைந்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றாமல் விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் தவெக அரசு, தற்போது நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அதுகுறித்து அடுத்தடுத்து கூட்டங்களைக் கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றி தவெக அரசு நடத்திய நாடகம், முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் இன்றைய உரையின் மூலமாகவே அம்பலமாகியுள்ளது. தொகுதி மறுவரையறையால் மாநிலங்களுக்கான, குறிப்பாக தமிழ்நாட்டின், மக்களவைப் பிரதிநிதித்துவ விகிதம் குறையாது என ஏற்கனவே உறுதியளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையிலேயே, முதலமைச்சர் ஜோசப் விஜய் அதே கோரிக்கையை முன்வைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்துவிட்டு, அடுத்த வாரத்தில் அதே கோரிக்கையை முன்வைத்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அதற்கடுத்த வாரமான இன்று முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருப்பதன் மூலம், வாரத்திற்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு தான் என்ன? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. எனவே, தமிழகத்தின் தலையாய பிரச்சனைகளைத் திசைதிருப்பும் வகையில், இதுபோன்ற அவசியமற்ற தீர்மானங்களை சட்டமன்றத்தில் முன்வைப்பதை விட்டுவிட்டு, தமிழகம் மற்றும் தமிழக மக்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.பல்டி அடித்த விஜய்
டிடிவி தினகரன் கேள்வி
முற்றிலும் முரண்பாடு
திசைதிருப்பும் வேலை