சென்னை: "லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிலவும் தமிழக அரசில் 6,574 பணியிடங்களை நிரப்புவதற்கு மட்டும் அறிவிப்பாணையை வெளியிட்டிருப்பது, கடல் அளவு தேவைக்கு கடுகளவு உதவுவது போல அமைந்துள்ளது." என தவெக அரசை விமர்சித்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. 6,574 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் இந்தத் தேர்வு வரும் ஜனவரி 10 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக அரசு ஆட்சிக்கு வந்தபின் அறிவிக்கப்படும் முதல் தேர்வான இதில், குறைவான காலி பணியிடங்களே நிரப்பப்பட உள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காலிப் பணியிடங்கள் லட்சக்கணக்கில் இருக்கும்போது, அவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பை சொற்ப எண்ணிக்கையில் வெளியிடுவதா? அதிகப்படியான காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணையைத் திருத்தி வெளியிட வேண்டும். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரி வசூலிப்போர் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 46 வகையிலான பணிகளுக்கு 6,574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 15 லட்சம் தேர்வர்கள் எதிர்கொள்ள வாய்ப்பிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு வெறும் 6,574 காலிப்பணியிடங்களை அறிவித்திருப்பது, அரசுப் பணி கனவில் அத்தேர்வை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இரவு பகலாகத் தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசுத் துறைகளில் நிலவும் அனைத்து காலிப்பணியிடங்களும் விரைந்து நிரப்பப்படும் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தவெக, லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிலவும் தமிழக அரசில் 6,574 பணியிடங்களை நிரப்புவதற்கு மட்டும் அறிவிப்பாணையை வெளியிட்டிருப்பது, கடல் அளவு தேவைக்கு கடுகளவு உதவுவது போல அமைந்துள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, கிராம மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தரப் பணி என வேலைவாய்ப்பு சம்பந்தமாக தவெக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்ற தற்போதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களையும் சொற்ப அளவிற்கு குறைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, தமிழ்நாடு அரசுத் துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பிடும் வகையிலும், தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடும் வகையிலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பைத் திருத்தி, அதிகப்படியான காலிப்பணியிடங்களுடன் கூடிய புதிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். தாராபுரம்: மா.செ கைது.. போலீஸ் ஸ்டேஷனுக்குள் ராக்கெட் விட்ட அதிமுகவினர்.. டிடிவி தினகரன் என்ட்ரி!
5 மாதத்தில் எப்படி பணம் இவ்வளவு வந்துச்சு.. நிஜ வாழ்க்கையில் விஜய் வில்லன்.. தினகரன் புகார்