சென்னை: "ஒருபுறம் White Powder புகழ் அமைச்சர், மறுபுறம் பொய்சொல்வதையே தன் தொழிலாக கொண்டு நிழல் முதலமைச்சராக செயல்படுவதாக சொல்லப்படும் மற்றொரு அமைச்சர், இதற்கிடையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனங்களுக்காக சொந்தக் கட்சியிலேயே லஞ்சம் வசூலிக்கப்படுவதாக புகாருக்குள்ளாகியிருக்கும் மூத்த அமைச்சர் - ஊழலை ஒழிப்போம் என கொக்கரித்த முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் சொன்ன தூய சக்தி அரசியல் இதுதானா?: என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தொட மாட்டேன், தொட்டவர்களையும் விடமாட்டேன் என கடந்த சில தினங்களுக்கு முன்பாக சட்டமன்றத்தையே சூட்டிங் ஸ்பாட் ஆக மாற்றிவிட்டார்களோ என்று எண்ணும் அளவிற்கு, சினிமா வசனங்களை ஒரே டேக்கில் அள்ளிவிட்டார் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் .
ஆனால், அவர்கள் பொதுவெளியில் போதைப் பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியாகி சர்ச்சைக்குள்ளான White Powder புகழ் அமைச்சர் மீது இதுவரை விசாரணை கூட நடத்த முன்வராதது ஏன்? கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையின் மூலமாக பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக கூறி முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையினரையும், அவர்கள் ஆற்றும் மக்கள் பாதுகாப்பு பணிகளையும் கொச்சைப் படுத்தும் வகையில் பேசி, அவ்வழக்கின் விசாரணையை திசைதிருப்பும் நோக்கில் செயல்படும் பொய்த்துறைக்கென்றே பிரத்யேகமாக நியமிக்கப்பட்டவராக சொல்லப்படும் அமைச்சரின் அரைவேக்காட்டுத் தனத்தை உண்மையான முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் கண்டும் காணாமல் இருப்பதன் மர்மம் தான் என்ன ? வாணியம்பாடியில் ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவருக்கு அரசு வழக்கறிஞர் பதவி, அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க சொந்தக் கட்சி நிர்வாகிகளிடமே வசூல் வேட்டை என அடுத்தடுத்து புகார்கள் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகளாக வருவது, தூயசக்தி எனும் பெயரில் மறைந்திருக்கும் ஊழல் சக்திகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரீல்ஸ் கண்டெண்டுக்கு ஏற்றவகையில் பொதுவெளியில் கர்ஜித்துவிட்டு, தற்போது அதற்கு முரணாக குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களையும், லஞ்சப் பணம் கொடுப்பவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக நியமிப்பதன் மூலம், ஏற்கனவே தங்களால் வெள்ளாவி வைத்து வெளுக்கப்பட்ட ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை தவெக அரசும், அதன் முதலமைச்சரும் பாதுகாக்க முனைகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல தவெக ஆட்சியில் புகாருக்கு உள்ளாகியிருக்கும் இந்த வழக்கறிஞர் நியமன ஊழலே அடுத்த ஐந்தாண்டு கால தவெக ஆட்சியின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. ஆகவே, அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகளை கலைந்து, வெளிப்படையான நியமன நடைமுறைகளை மேற்கொண்டு தகுதியுடைய வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்திட வேண்டும் என வலியுறுத்துவதுடன், இந்த நியமனத்தில் புகாருக்கு உள்ளானவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு ஊழல் முறைகேடுகளுக்கான முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.டிடிவி தினகரன்,
அரசு வழக்கறிஞர் நியமனம்
ஊழல் குற்றச்சாட்டு
தவெக ஆட்சி
ஊழல் முறைகேடு