தமிழக முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு.. டிடிவி தினகரன் வரவேற்பு

  • சென்னை: தமிழகத்தில் புதியதாக ஆட்சிப்பொறுப்புக்கு வந்திருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் அம்மா உணவகங்களின் அவசியத்தை உணர்ந்து அதனை மேம்படுத்த பிறப்பித்திருக்கும் உத்தரவை மனதார வரவேற்கும் இந்நேரத்தில், தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் அம்மா உணவகங்களை திறந்து ஏழைத் தொழிலாளர்களின் பசியைப் போக்கிட உதவிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் 'அம்மா உணவகம்' திட்டம் கடந்த 13 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருக்கிறது. அதிமுக ஆட்சியின்போது கடந்த 2013-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்தார். வெறும் 1 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், 3 ரூபாய்க்கு தயிர் சாதம் என மிகக்குறைந்த விலையில் உணவை வழங்குவது ஏழைகளுக்கு பேருதவியாக இருந்தது.

    Advertisement

    தமிழ்நாட்டில் முதலில் சென்னை மாநகராட்சி பகுதியில்தான் இந்த உணவகம் தொடங்கப்பட்டது. அதன்பின்னர் மற்ற இடங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு மக்களிடம் இருந்த வரவேற்பை அறிந்த மற்ற மாநிலங்கள் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் குறைந்த விலையில் உணவு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

    தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரானார். அதன் பின்னரும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அம்மா உணவகங்கள் தொடர்ந்து இயங்கியே வருகிறது. பேரிடர் காலங்களான பெருமழை, வெள்ளம் போன்ற இக்கட்டான சூழல்களில் மக்களுக்கு இலவசமாக பசி தீர்க்கும் அட்சய பாத்திரமாகவும் அம்மா உணவகங்கள் இருக்கிறது.

    Advertisement

    அரசு நடவடிக்கை

    இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் விஜய் கடந்த கால ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் தொடரும் என அறிவித்திருந்தார். அந்த வகையில் அம்மா உணவகத்தை மேம்படுத்த த.வெ.க. அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. அம்மா உணவகங்களில் உணவுகள் தரம் குறைந்திருப்பதாக பல இடங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் உணவு வகைகள் குறைக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 620 அம்மா உணவகங்களை புதுப்பிக்க விஜய் உத்தரவிட்டிருக்கிறார்.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.

    Advertisement

    சமீப காலங்களில் இவ்வுணவகத்தில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்று முதல்வர் விஜய்யின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து முதல்வர் விஜய் உரிய அரசுத் துறை செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், சமையல் உபகரணங்களை உடனடியாக கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த மறுசீரமைப்புக்கும், பொருட்கள் கொள்முதல் செய்வதற்கும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து செலவினங்களை மேற்கொள்ளவும் அவர் ஆணையிட்டுள்ளார்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதனை வரவேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீரமைக்க முதலமைச்சர் பிறப்பித்திருக்கும் உத்தரவு வரவேற்புக்குரியது - அம்மா உணவகங்களின் அவசியத்தை உணர்ந்து அத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.

    சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள 600க்கும் அதிகமான அம்மா உணவகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், தேவையான சமையல் உபகரணங்களை உடனடியாக கொள்முதல் செய்து தரமான உணவு தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கிடவும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் பிறப்பித்திருக்கும் உத்தரவை மனமார வரவேற்கிறேன்.

    Advertisement

    மனிதர்கள் உயிர்வாழ அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவு அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமானதாக கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையில் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பசியைப் போக்கும் அட்சயப்பாத்திரமாக விளங்கியதை எவராலும் மறுக்க முடியாது.

    ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக திகழ்ந்த அம்மா உணவகங்கள், இதயதெய்வம் அம்மா அவர்களால் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக, கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறையாலும், உபகரணங்கள் தட்டுப்பாட்டாலும் சந்திக்காத சிரமங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, அவை தொடங்கப்பட்ட நோக்கத்தையே சிதைக்கும் வகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முடக்கி வைக்கப்பட்டிருந்தன.

    தமிழகத்தில் புதியதாக ஆட்சிப்பொறுப்புக்கு வந்திருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் அம்மா உணவகங்களின் அவசியத்தை உணர்ந்து அதனை மேம்படுத்த பிறப்பித்திருக்கும் உத்தரவை மனதார வரவேற்கும் இந்நேரத்தில், தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் அம்மா உணவகங்களை திறந்து ஏழைத் தொழிலாளர்களின் பசியைப் போக்கிட உதவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

    English Summary

    ammk leader TTV Dhinakaran welcomes Chief Minister Vijay's announcement ordering the revamp of Amma unavagam