“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி

  • சென்னை: "சரிந்து வரும் தனது அரசியல் சாம்ராஜ்யத்தையும், தோல்வியையும் மறைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி, அரசு மீதும், தவெக மீதும் பழி போடுகிறார்" என்று தமிழக வெற்றிக் கழகம் மிகக் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    Advertisement

    அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    Advertisement

    தவெக பதிலடி

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியான அறிக்கையில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் ராஜினாமா கடிதத்தை "தலைமைச் செயலகத்தில்" பேரவைத் தலைவரிடம்தான் கொடுக்க முடியும் என்பதைக்கூட அறியாத ஒருவர், ஏற்கனவே பல முறை ஆட்சி செய்த கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கிறார் என்பதை எண்ணி தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.

    ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனில் சட்டமன்றச் செயலகத்திற்குத்தான் வர வேண்டும். அதுதான் ஜனநாயகம் வகுத்த வழிமுறை. இந்த அடிப்படை தெரியாமல் உளற வேண்டியது. சரிந்து வரும் உங்கள் அரசியல் சாம்ராஜ்யத்தை எங்களின் மீது பழிபோட்டு காப்பாற்ற முடியாது!

    Advertisement

    தோல்வியை மறைப்பதற்காக

    ஒரு பலவீனமான தலைமை, தன் தோல்வியை மறைப்பதற்காக அரசு மீதும் நமது கட்சியின் மீதும் பழி போடுகிறது. உங்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லை. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் ஒரு தலைமையின் கீழ் இருக்க விரும்பாமல், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நமது தலைவரின் ஆற்றலை மதித்து, மக்கள் சேவை செய்ய அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் வந்து இணைந்துள்ளனர்.

    சாதாரணமாக கட்சி மாறுபவர்கள் தங்களின் எம்.எல்.ஏ பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்ப்பார்கள். ஆனால், இங்கு அவர்கள் தங்களின் பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டு, மக்களின் மறுதேர்தலைச் சந்திக்கத் தயாராக வந்துள்ளனர்.

    Advertisement

    கூவத்தூரில் என்ன நடந்தது?

    கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை இந்த நாடே அறியும்! அன்று சொகுசு விடுதியில் அடைத்து வைத்து, பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள நடத்தப்பட்ட நாடகங்களை மக்கள் மறக்கவில்லை. ஆனால் இன்று, தார்மிகப் பொறுப்பேற்று, தங்களின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்துவிட்டு, மக்கள் மன்றத்தை மீண்டும் சந்திக்கத் துணிவோடு வந்துள்ளார்கள்.

    தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள். இப்போது உங்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களே உங்களை நிராகரித்து வருகிறார்கள். எங்களின் கவனம் முழுவதும் மக்கள் மேம்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கியே உள்ளது!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதிமுகவினர் ஷாக்

    அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சிலர் தங்கள் பதவிகளைத் துறந்துவிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வரும் சூழலில் தவெக வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, தமிழக அரசியல் களத்தில் விவாதங்களை மேலும் சூடாக்கியுள்ளது. குறிப்பாக கூவத்தூர் விவகாரத்தைக் குறிப்பிட்டு தவெக தாக்கியிருப்பது, அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    TVK has issued a scathing condemnation, stating that "Edappadi Palaniswami is shifting the blame onto the government and the TVK in an attempt to mask his crumbling political empire and his own failure.