சென்னை ஓட்டேரி பெண்ணுக்கு நடுராத்திரியில் வீடியோ கால் செய்த தவெக நிர்வாகி கைது! கூடும் கிரைம் ரேட்

  • சென்னை: சென்னை அருகே ஓட்டேரியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு வீடியோ கால் போட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக நிர்வாகி ஜோசப் சேவியர் என்பவரை போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை ஓட்டேரியை சேர்ந்த பெண் ஒருவர், தனது தந்தையின் சம்பள பாக்கியை பெற தவெக நிர்வாகி ஜோசப் சேவியர் (48) என்பவரை தொடர்பு கொண்டாராம். அப்போது அந்த பெண்ணின் எண்ணை தனது செல்போனில் சேமித்து வைத்துக் கொண்ட ஜோசப் சேவியர் அந்த பெண்ணுக்கு நள்ளிரவு 1 மணிக்கு போன் செய்து தொல்லை கொடுத்தாராம்.

    அது போல் வீடியோ காலிலும் அவருக்கு இரவு நேரங்களில் போன் செய்து தொல்லை தந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஜோசப் சேவியர் மீது வழக்குப் பதிவு செய்து ஓட்டேரி போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தவெக ஆட்சிக்கு வந்தது முதலே அந்த கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் தொல்லை புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த மாதம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தவெக நிர்வாகி ஒருவருக்கு அமைச்சர் ஸ்ரீநாத்தின் வலதுகரங்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இது குறித்து அமைச்சரிடம் முறையிட்ட போது, தனது வலது கரங்கள் மீது புகார் கூறிக் கொண்டு வர வேண்டாம் என அந்த பெண்ணிடம் சொன்னதாக வேதனை தெரிவித்தார்.

    அது போல் கடந்த ஜூன் மாதம் சென்னையில் கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக நிர்வாகி வேம்புலி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதாவது இரவு நேரத்தில் அந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. தவெக ஆட்சியில் ஒரே நாளில் 10 பாலியல் குற்றங்கள் நடந்ததாக தமிழக பாஜக ஒரு வீடியோ வெளியிட்டிருந்தது.

    இது போன்ற தொடர் சம்பவங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னையில் கணவரை இழந்த பெண்ணுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது: கணவனை இழந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தவெக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

    ஒருபுறம் ஆளுங்கட்சி திமிரில், பெண்கள் பாதுகாப்பை தவெகவினர் காவு வாங்கி வருகின்றனர். மறுபுறம், அதிகார மமதையில், ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் போன்றோர் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பேரம் பேசுகின்றனர்.

    இப்படி ஒட்டுமொத்தமாக பெண்கள் பாதுகாப்பை சீரழிக்கும் கும்பலை கைகுள்ளேயே வைத்துக்கொண்டு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று கூற தங்களுக்கு வாய் கூசவில்லையா? என கேட்டுள்ளார்.

    அண்ணாமலை: பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதல்வர் விஜய் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

    திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இதுபோன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

    English Summary

    TVK activist Joseph Saviour arrested for sexual assaulting a woman from Chennai Otteri. He used video call to speak with her.