ஓபனிங்க்லயே எண்ட் கார்டா? கூட்டணி தலைகளுக்குள் குஸ்தி! முடங்கிய தவெக கூட்டணி! வேதனையில் விஜய்?

  • சென்னை: தமிழகத்தின் மூன்றாவது பிரதான கூட்டணி உருவாவதற்கான வேலைகள் வேகமெடுத்து இருந்தாலும் தற்போதைக்கு அது தற்காலிகமாக தடைபட்டிருக்கிறது. தமிழக வெற்றிக்கழக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் சில கட்சிகள் முரண்பாட்டோடு இருக்கின்றன. திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என திருமாவளவன் பேசியதும், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வைகோ - திருமா இடையே போட்டி நிலவுவதும் தமிழக வெற்றிக்கழக கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதை தாமதப்படுத்தி வருவதாக சொல்கின்றனர் வட்டாரத்தினர்.

    Advertisement

    கடந்த 2026 தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் தனித்துப் போட்டியிட்டது. நடிகரும் கட்சியின் தலைவருமான விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.

    Advertisement

    தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் களம் கண்ட நிலையில் இறுதி முடிவு யாரும் எதிர்பாராத வகையில் இருந்தது. ஆளுங்கட்சியான திமுக இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு, எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

    தவெக கூட்டணி

    ஆச்சரியம் அளிக்கும் வகையில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக்கழகம் தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லாததால் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைந்துள்ளது. மதிமுக எம்எல்ஏக்கள் திமுக தரப்பிலேயே தஞ்சம் புகுந்து விட்ட நிலையில் வைகோ ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.

    Advertisement

    அமைச்சரவை

    இதில் கம்யூனிஸ்டுகள் தவிர்த்து காங்கிரஸ். விடுதலை சிறுத்தைகள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன. காங்கிரஸ் ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவை தந்திருக்கும் நிலையில் இரண்டு அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என இருவருக்கும் நான்கு எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் இரண்டு அமைச்சரவை பதவி தரப்பட்டுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகம்

    இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில் அதற்கு முன்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து பேசினார். அதற்குப் பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    Advertisement

    தவெக கூட்டணி

    இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது குறித்து முடிவெடுக்கப்படலாம் என சொல்லப்பட்டது. ஆனால் எந்தவித அறிவிப்பும் இன்றி அந்தக் கூட்டம் முடிவடைந்தது. இந்த நிலையில் இது குறித்து சில தகவல்களை நம்மிடம் தமிழக வெற்றி கழகத்தினர் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதன்படி," ஜூலை ஒன்றாம் தேதி சென்னை கோவளத்தில் நடைபெற்ற தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது, கூட்டணிக்கு என ஒரு ஒருங்கிணைப்பு குழுவை அமைப்பது, குறைந்தபட்ச செயல் திட்டம், புதிய கூட்டணிக்கான பெயரை அறிவிப்பது ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

    Advertisement

    விஜய்

    கூட்டணியின் தலைவராக விஜய் இருப்பார் எனவும், கூட்டணியின் நடவடிக்கைகள், கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு, ஆலோசனை உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்காக ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ஒருங்கிணைப்பாளர் பதவி தான் தற்போது பெரும் சிக்கலாக இருக்கிறது. அரசியலிலும் நிர்வாகத்திலும் அனுபவம் வாய்ந்த காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சர்மான ப.சிதம்பரத்தை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு நியமிக்க விஜய் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

    ப சிதம்பரம்

    இந்தியா கூட்டணி போன்ற தேசிய கூட்டணியை ஒருங்கிணைத்த ப.சிதம்பரத்திற்கு இது பெரிய பணியாக இருக்காது என்பது விஜய்யின் எண்ணம். அதே நேரத்தில் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் தன்னை நியமிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்களாம். நீண்ட காலமாக கூட்டணி அரசியல் அனுபவம் கொண்டவர்கள் என்பதால் தங்களது அனுபவத்தை கூட்டணி ஒருங்கிணைப்பில் பயன்படுத்த முடியும் என அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

    Advertisement

    வைகோ - திருமாவளவன்

    இதனால் ஒருங்கிணைப்பாளர் பதவியை அறிவிப்பதில் குழப்பம் நிலவுகிறது. கூட்டணி பெயர் தொடர்பாகவும் ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு ஐடியாவில் இருக்கிறார்களாம். இது மட்டும் அல்லாமல் கடந்த சில தினங்களாகவே காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர். விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொது செயலாளர் வைகோ ஆகியோரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. ஊடகங்களிலும் பொதுவெளிகளிலும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருவதும் கூட்டணிக்குள் குழப்பத்தை உருவாக்கி உள்ளது.

    வேதனையில் விஜய்

    இதனால் அரசியல் கட்சியை சேராத அல்லது எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நடுநிலை நபரை கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கலாம் என விஜய் பரிசீலித்து வருவதாக சொல்கின்றனர். இது ஒருபுறம் இருக்க திருமாவளவன் "நாங்கள் இன்னமும் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்" என பேசியதும் விஜய்யை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளதாக சொல்கின்றனர். கூட்டணியே இன்னும் ஆரம்பிக்கவில்லை அதற்குள் இவ்வளவு பிரச்சனையா? எனவும் அவர் வேதனையில் இருக்கிறார் என்கின்றனர்.

    English Summary

    Differences over the alliance coordinator post and internal disagreements have reportedly delayed the formal announcement of the TVK-led alliance.