விசிகவின் மாநாட்டிற்காக ஒரே நாளில் இரண்டு கெட்ட பெயர் வாங்கிய தவெக அரசு.. தர்ம சங்கடத்தில் விஜய்

  • சென்னை: விசிக மாநாடு தொடர்பான இரண்டு பிரச்சனைகளுக்காக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசு இரண்டு விஷயங்களில் கெட்ட பெயர் வாங்கிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முதல் விஷயம், உளுந்தூர் பேட்டையில் விசிக மாநாட்டை ஒட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது, இரண்டாவது விஷயம்.. தஞ்சையில் விசிக மறியல் போராட்டத்தில் போலீசார் மற்றும் ஒரு இளைஞன் இடையே நடந்த வாக்குவாதம் ஆகியவை அரசிற்கு கெட்ட பெயரை வாங்கி கொடுத்ததாகவும், இந்த இரண்டுமே கூட்டணி கட்சியான விசிகவால் வந்த கெட்ட பெயர் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

    Advertisement

    உளுந்தூர் பேட்டையில் விசிக மாநாட்டை ஒட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு அரசியல் கட்சியின் மாநாட்டிற்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது எந்த வகையில் சரியானதாக இருக்கும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் முடிவைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

    Advertisement

    அவர் தனது பதிவில் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாட்டிற்காகப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை முற்றிலும் தேவையற்றது மற்றும் கண்டிக்கத்தக்கது. போக்குவரத்து நெரிசல் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தான் விடுமுறை அளிக்கப்பட்டதாகக் கூறுவது வெட்கக்கேடானது.

    மாணவர்களின் உண்மையான நலன் அவர்களின் படிப்பில்தான் உள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்றால், அரசு விடுமுறை நாட்களில் அந்த அரசியல் கட்சி மாநாடு நடத்த அனுமதி அளித்திருக்க வேண்டும். அதை விடுத்து, மாநாட்டிற்காகப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது தவறான முன்மாதிரி" என்று கூறியுள்ளார். பாஜகவினர் மட்டுமின்றி பலரும் உளுந்தூர் பேட்டை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்ததை கண்டித்துள்ளன. ஒரு அரசியல் கட்சி மாநாட்டிற்காக பள்ளிகள் விடுமுறைப்படுவது மிக அபூர்வமானதாகவே பார்க்கப்படுகிறது. இதுதான் அரசின் மீதான விமர்சனத்திற்கு காரணமாக உள்ளது.

    Advertisement

    அடுத்ததாக தஞ்சையில் இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவமும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. தஞ்சை ரயில் நிலையம் முன்பு வி.சி.க. சார்பில் அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் மற்றும் மாநாடு தொடர்பான விளம்பர பேனர் நேற்று முன்தினம் வைக்கப்பட்டிருந்தது. அனுமதியின்றி அந்த விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்ததாக அந்த பேனரை நேற்று தஞ்சை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதனை கண்டித்து தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு வி.சி.க.வினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தஞ்சை மாநகர போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் பேனரை மீண்டும் வைத்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என வாக்குவாதம் செய்தார்கள். அத்துடன் மறியலை தொடர்ந்த வண்ணம் இருந்ததால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த ஏராளமான பொதுமக்கள் வழிவிடுமாறு கூறி வி.சி.க.வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    Advertisement

    இதேபோல அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஆகாஷ் என்பவரும் வழிவிடுமாறு கூறினார். அப்போது வி.சி.க.வினர் அந்த இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் இளைஞர் ஆகாஷை சமாதானப்படுத்த முயன்றார். தன்னை சமாதானப்படுத்திய போலீசாரிடம், அந்த இளைஞர் எகிறினார். நான் வேலைக்கு செல்ல வேண்டும். நான் வேலைக்கு செல்லாவிட்டால் என்னுடைய சம்பளத்தை யார் தருவார்கள்? எனக்கேட்டு வாக்குவாதம் செய்தார். அப்போது போலீசார், இளைஞரிடம் அமைதியாக இருக்கும்படி கூறினார். ஒரு கட்டத்தில் போலீசாருக்கும், அந்த இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    Advertisement

    அப்போது அந்த இளைஞரை நோக்கி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம், அமைதியாக இருக்குமாறு கூறி கையை ஓங்கினார். அவர் அடிச்சுருவியா, எங்க அடி என்று ஒருமையில் பேசியுள்ளார். இதனால் கோபம் அடைந்த சிறப்பு எஸ்ஐ அவரை கண்ணத்தில் அறைந்தார். உடனே ஆவேசமான அந்த இளைஞர் அப்துல் ரஹீமின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

    இதையடுத்து இளைஞர் ஆகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்திற்கும் விசிகவின் சாலை மறியல் தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், தட்டிக்கேட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுத்தது எந்த வகையில் நியாயம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுவும் தவெக அரசிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இந்த இரண்டு சம்பவங்களுமே முதல்வர் விஜய்க்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

    English Summary

    TVK earns a bad reputation twice in a single day over the VCK conference; Vijay finds himself in an awkward position.