சென்னை: மதுராந்தகம் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சில இடங்களில் வேட்பாளர்களை பொதுமக்கள் துரத்தி அடித்து வருவதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்கு தான் அதிக எதிர்ப்பு நிலவுவதாக சொல்கின்றனர் அப்பகுதி மக்கள்.
2026 தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்து இன்னும் முழுமையாக 6 மாதங்கள் கூட கடக்காத நிலையில் அடுத்த தேர்தலை சந்திக்க இருக்கிறது தமிழகம். மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர்.
தற்போது அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக அதிமுகவில் இருந்து விலகி தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள மரகதம் குமரவேல், சத்யபாமா ஒரு மீண்டும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தரப்பில் மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டியிடுகின்றனர். அதிமுக தரப்பில் மதுராந்தகத்தில் கணிதா சம்பத்தும், தாராபுரத்தில் பானுமதியும் போட்டியிடுகின்றனர். இதைப் போல மதுராந்தகத்தில் ஜானகிராமனும், தாராபுரத்தில் கார்த்திகாவும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணனும், மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தியும் போட்டியிடுகின்றனர். இதனால், இந்த தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. தற்போது 2 தொகுதிகளிலும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். குறிப்பாக தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் வேட்பாளர்களுக்கு சிக்கல் முளைத்திருக்கிறது. குறிப்பாக ஆளும் தமிழக வெற்றிக்கழகத்தின் வேட்பாளர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் அவர்களை விரட்டி அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நேற்று தாராபுரம் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா நந்தம்பாளையம், வெறுவேடம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தனது ஆதரவாளத்துடன் சென்று விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் சத்யபாமாவின் வாகனத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். வாய்க்காலில் தண்ணீர் கொண்டு செல்வதை சத்யபாமா தடுத்ததாக கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சில இடங்களில் வாக்கு சேகரிக்க சென்ற போது அதிமுகவினர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. இது மட்டும் இன்றி மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல், அனந்தமங்கலம், சிறுதாமூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு பரப்பரைக்குச் சென்ற போது அவரை உள்ளே விடாமல் எதிர்ப்பு தெரிவித்து திருப்பி அனுப்பியதும் தமிழக வெற்றிக் கழகத்தினரை கலக்கமடைய செய்துள்ளது. அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் அவர்கள் இணைந்ததால் தான் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதிமுகவினர் திட்டமிட்டு அவர்களை விரட்டி அடிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர். அதே நேரத்தில் பொதுமக்கள் இடையேயும் அதிருப்தி நிலவுவதாக சொல்லப்படுகிறது. இவர்கள் மட்டுமல்லாது வேறு சில கிராமங்களுக்கு சென்ற பிற கட்சி வேட்பாளர்களுக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கும் வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து பிரச்சாரத்திற்கு செல்லும் வேட்பாளர்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்கு 10 முதல் 15 போலீசார் பாதுகாப்பாக செல்வதாக சொல்கின்றனர்.இடைத்தேர்தல்
ஐந்து முனை போட்டி
மரகதம் குமரவேல்
தமிழக வெற்றி கழகம்
போலீஸ் பாதுகாப்பு