சென்னை: தவெக தலைவர்கள் பேசிய பேச்சுக்களும் அவர்களின் நடவடிக்கைகளும் ஏற்படுத்திய அதிர்வலைகள், தற்போது மாநில அரசியல் களம் முழுவதையும் சூடேற்றியுள்ளன. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கத்தோலிக்க அமைப்பின் கருக்கலைப்பு எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்டதும், நிதியமைச்சர் மரிய வில்சன் தனது தமிழ் உச்சரிப்பு தொடர்பான விமர்சனத்திற்குப் பதிலளிக்கையில் தனது கிறிஸ்தவ நம்பிக்கையை முதன்மைப்படுத்திப் பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ள பாஜக, தமிழகத்தில் இந்து வாக்குகளை ஒரே அணியில் திரட்டுவதற்கான தீவிர 'அரசியல் ஆபரேஷனை' உடனடியாகத் தொடங்கியுள்ளது.
சமீபத்தில் சட்டசபையில் பட்ஜெட் விவாதங்களின் போது, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டி.எம். ராஜேந்திரன், நிதியமைச்சர் மரிய வில்சனின் தமிழ் உரையில் இருந்த இலக்கண மற்றும் உச்சரிப்புப் பிழைகளைச் சுட்டிக்காட்டினார். அதற்குப் பதிலளித்த நிதியமைச்சர், "எனக்கு ஒரு மொழியை எனது கிறிஸ்தவம் கற்றுக் கொடுத்துள்ளது; அது அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி. இது பாதிபேருக்கு, எவ்வளவு தமிழ் படிச்சாலும் தெரியாது. நான் பைபிளை படித்திருக்கிறேன், பிறப்பால் கிறிஸ்தவன்" என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். இதற்கு முன்னதாக, கத்தோலிக்கக் கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட "மார்ச் ஃபார் லைஃப்" பேரணியில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கலந்து கொண்டு, "கருவில் உருவாகும் நொடியிலிருந்தே உயிர் தொடங்குகிறது" என்று உரையாற்றினார். நடுநிலை வகிக்க வேண்டிய அரசமைப்புப் பதவிகளில் இருப்பவர்கள், மதச் சார்புடைய கருத்தியல்களுக்குப் பகிரங்கமாக ஆதரவு தெரிவிப்பது தமிழ்நாட்டு அரசியலின் மரபுகளுக்கு எதிரானது என்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்த இரு சம்பவங்களையும் கையில் எடுத்துள்ள பாஜக தலைமை, மாநிலம் தழுவிய அளவில் இந்து வாக்காளர்களை ஒருங்கிணைக்கும் சிறப்பு நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. இதற்காக மாவட்ட மற்றும் தொகுதி வாரியாகச் சிறப்புப் பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் கோவில் பகுதிகளை ஒட்டிய மக்கள் சந்திப்புகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்தக் கூட்டங்களில் பா.ஜ.க பேச்சாளர்கள் பேசவிருக்கும் முதன்மைப் பொருளாவது: தவெக ஆட்சியில் நடுநிலைமை கைவிடப்பட்டு, ஒரு குறிப்பிட்ட மதத்தின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. சட்டமன்றத்திலேயே மதக் கருத்துக்கள் முன்வைக்கப்படுவதன் மூலம் பொது நிர்வாகம் பாதிக்கப்படுகிறது. கிறிஸ்துவம் பரப்பப்படுகிறது, என்ற வாதம் வைக்கப்பட உள்ளது. இத்தகைய பிரச்சாரத்தின் மூலம், தவெகவின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி, சிறுபான்மை ஆதரவு அரசியல் நிலவுவதாகக் கூறி இந்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது. தமிழக அரசியலில் நீண்டகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த திராவிட அரசியல், பொது நிர்வாகத்தையும் மத நம்பிக்கையையும் தனித்தனியாகப் பிரித்து வைத்திருந்தது. திமுக ஆட்சிக் காலத்தில் இத்தகைய மத அடையாள மோதல்கள் பொதுவெளியிலும் சட்டமன்றத்திலும் எழாத வண்ணம் மிகவும் கவனமாகக் கையாளப்பட்டன. ஆனால், தவெக அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே அமைச்சர்களும் சபாநாயகரும் தங்களின் தனிப்பட்ட மத நம்பிக்கைகளை அரசமைப்புப் பதவிகளோடு இணைத்துப் பேசியது, பாஜகவிற்கு புதிய ஆயுதத்தைக் கொடுத்துள்ளது. இந்த அரசியல் காய்நகர்த்தல் மூலம், வழக்கமாகப் பிரிந்து கிடக்கும் வாக்குகளைத் தன்பக்கம் ஈர்த்து, தமிழகத்தில் தனக்கான பலமான வாக்கு வங்கியைக் கட்டமைக்க பா.ஜ.க முயல்கிறது. குறிப்பாகக் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இந்தக் கூட்டங்களை தீவிரமாக நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு இது ஒரு மிகப்பெரிய அரசியல் சவாலாக உருவெடுத்துள்ளது. மத ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் நடுநிலைமையைக் காப்பாற்றத் தவறினால், அது பாஜகன் தீவிரப் பிரச்சாரத்திற்கு வழிவகுக்கும் என்பதற்கு இந்நிகழ்வே சான்றாகும். தவெக தலைவர்களின் இந்த அவசரப் பேச்சுக்கள், பா.ஜ.க.விற்கு இந்து வாக்குகளைத் திரட்டுவதற்கான களத்தை அமைத்துக் கொடுத்துள்ளதுடன், தமிழக அரசியலில் ஒரு புதிய மத அரசியலை உருவாக்கியுள்ளது. வரும் நாட்களில் தவெக அரசு இந்தச் சவாலை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்பதில்தான் கட்சியின் எதிர்கால அரசியல் திசைவழி அடங்கியுள்ளது.சட்டசபை சம்பவங்களும் கிளம்பிய சர்ச்சைகளும்
பா.ஜ.க.வின் கள வியூகம் மற்றும் கூட்டங்கள்
மதச்சார்பின்மை
விஜய்க்கு உருவாகியுள்ள அரசியல் சோதனை