தவெகவில் புதியவர்களுக்கு பதவியா.. கவுன்சிலர் சீட் உத்தரவாதம் கொடுங்க.. டென்ஷனான விஜய் விசுவாசிகள்!

  • சென்னை: தவெகவில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். சட்டசபைத் தேர்தலின் போது வேட்பாளர்கள் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன் தவெகவில் இணைந்தவர்களுக்கு இந்த பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கும் பொறுப்புகள் அளிக்கப்பட உள்ள சூழலில், விஜய்யின் விசுவாசிகள் பலரும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

    Advertisement

    தவெக சார்பாக புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான செயலாளர்களாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளராக முனிரத்தினம், நெல்லை தென்கிழக்கு மாவட்ட செயலாளராக ரெட்டியார்பட்டி நாராயணன், நெல்லை மத்திய மாவட்டச் செயலாளராக மரியஜான், நெல்லை வடக்கு மாவட்டச் செயலாளராக ஆர்.எஸ்.முருகன், திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டச் செயலாளராக அபிஷேக் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

    Advertisement

    இவர்கள் அனைவருமே வேட்பாளர்கள் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன் தவெகவில் இணைந்து சீட் பெற்றவர்கள். இவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க முடியாது என்பதால், கட்சியில் பொறுப்பு கேட்டு நீண்ட நாட்களாகவே பேசி வந்தனர். இந்த நிலையில் கட்சியில் மாவட்டச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. தவெகவின் இந்த நியமனத்திற்கு பின் சில சம்பவங்களும் இருக்கின்றன.

    அதாவது திமுக தரப்பில் இவர்கள் அணுகப்பட்ட போது, பதவியை ராஜினாமா செய்துவிட்டு வருவதற்கு தயாராக இருந்துள்ளனர். இதனையறிந்துதான் அவர்கள் கேட்டவற்றை தவெக தலைமை செய்து கொடுத்திருக்கிறது. அதேபோல் அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த பலருக்கும் பொறுப்புகள் கொடுக்க தவெக தலைமை ஆலோசனையை தொடங்கி இருக்கிறது.

    Advertisement

    அதிமுகவில் இருந்து வந்தவர்களில் பலருக்கும் பொறுப்பு வழங்கப்படும் என்ற உத்தரவாதமும் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவால் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் விரைவில் கொஞ்சம் கொஞ்சமாக பவர் செண்டராக உருவாகக் கூடும் என்று தெரிகிறது. உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வருவதால், கட்சியில் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள் ஆதிக்கம் செய்ய தொடங்கி இருக்கின்றனர்.

    இதனால் தவெகவின் விஜய்யின் விசுவாசிகள் அதிருப்தி அடையத் தொடங்கியுள்ளனர். இப்போதே மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பு கொடுக்க வேண்டும், கவுன்சிலர் சீட்டுக்கான உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு பகுதிகளில் நிர்வாகிகள் கதவுகளை தட்ட தொடங்கி இருக்கின்றனர். இதனால் உள்ளாட்சித் தேர்தலின் போது தவெகவில் மிகப்பெரிய பிரச்சனைகள் உருவாகலாம் என்று பார்க்கப்படுகிறது.

    English Summary

    TVK: CM Vijay's Loyalists Discontent Over TVK’s Fresh District Post Allocations ahead of Local Body Elections