சென்னை: தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார். புதிய கூட்டணியில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தவெக தங்களுக்கு அழைப்பு விடுத்ததாக கூறிய பெ.சண்முகம், வெளியில் இருந்து தவெக ஆட்சிக்கு அளித்து வரும் தொடரும் என்றும் கூறியுள்ளார்.
தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டம் நாளை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடக்கவுள்ளது. இதனையொட்டி சிபிஎம், சிபிஐ, விசிக, காங்கிரஸ், ஐயூஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் அழைப்பு விடுத்தனர். ஏற்கனவே ஜூலை 1ஆம் தேதி தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.
அதில் சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் பங்கேற்கவில்லை. இதனால் 2வது கூட்டத்தில் இந்த இரு கட்சிகளும் பங்கேற்குமா என்ற எதிர்பார்ப்பு தவெகவினர் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், செப்டம்பர் 4ஆம் தேதி அமைச்சர்கள் 4 பேர் எங்களிடம் தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டம் நடக்க உள்ளதாக அழைப்பு விடுத்தனர். நாங்கள் அதற்கு, இந்த கூட்டத்திற்கான நோக்கம் என்ன என்று கேட்டோம். அதற்கு அமைச்சர்கள் தரப்பில், தவெக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்குவது, கூட்டணிக்கான குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குவது, உள்ளாட்சி தேர்தல், லோக்சபா தேர்தலில் கூட்டணியின் சார்பாக எதிர்கொள்வது என்ற நோக்கத்தில் கூட்டம் கூட்டப்படுவதாக கூறினர். அதற்கு நாங்கள் எங்கள் கட்சியின் தலைமையிடம் பேசி தான் முடிவினை சொல்ல முடியும் என்று கூறினோம். அந்த அடிப்படையில், நாளை நடக்கவுள்ள தவெக கூட்டத்தில் சிபிஎம் கட்சி பங்கேற்காது. வெளியில் இருந்து தவெக ஆட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளோம். அந்த ஆதரவு தொடரும். அதேபோல் மக்கள் பிரச்சனைகள் தொடர்பான ஆலோசனைகளை தவெக அரசுக்கு கொடுப்போம் என்றார். அப்போது தவெக ஆட்சிக்கு 5 ஆண்டுகளும் ஆதரவு தொடருமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பெ.சண்முகம், அது தவெகவின் நிலைப்பாட்டை பொறுத்தது என்று பதில் அளித்தார். இதனால் தவெக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைய வாய்ப்புகள் குறைவு என்றே பார்க்கப்படுகிறது.