சென்னை: தவெக ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த கால ஆட்சியை போலவே இப்போதும் நடந்து வருவதாக கூறிய சண்முகம், இதே நிலை நீடித்தால் சிபிஎம் அளித்த நிபந்தனையற்ற ஆதரவு என்ற நிலையை மறுபரிசீலனை செய்வோம் என்று கூறியுள்ளார்.
டெல்லியில் சமூக ஆர்வலர் சோனம் வான்சுக் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சி நடத்தி வரும் போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு அதிகரித்து வருகிறது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதில் காக்ரோச் ஜனதா கட்சியினர் தீவிரமாக இருக்கின்றனர். இவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற போது, போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த வீடியோ நாடு முழுவதும் மாணவர் சமூகத்தை கொந்தளிக்க வைத்திருக்கிறது. இதனால் நேற்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் சில கல்லூரிகளில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தொந்தரவு செய்து மிரட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் மதுரை பல்கலைக்கழகத்தில் வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தவெக அரசின் இத்தகைய செயல்பாடுகளுக்கு கடுமையாக விமர்சனங்களை அனைத்து கட்சிகளும் முன் வைத்து வருகின்றன. இந்த நிலையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாட்டில் கடந்த கால ஆட்சியை போலவே இப்போதும் நடந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் தவெகவுக்கு அளித்து வந்த நிபந்தனையற்ற ஆதரவு என்ற நிலையை மறுபரிசீலனை செய்ய நேரிடும். தொழிலாளர்கள், மாணவர் அமைப்புகள் காவல்துறையினரால் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிகளாகிய நாங்கள் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறோம். பாஜக ஆதரவோடு தமிழ்நாட்டில் ஆட்சி அமைய கூடாது என்பதற்காகவே நாங்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்தோம். தவெக ஆட்சி ஏழை, எளிய மக்களின் நலனை கொண்டதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் நிலைப்பாடு வேறு மாதிரி இருக்கும். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை மத்திய மாநில அரசுகள் ஒடுக்க கடுமையான போராட்டத்தை மேற்கொள்கின்றன. மாணவர்கள் ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், அவர்கள் மீது அடக்குமுறையை ஏவுவது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.