சென்னை: அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் தவெகவில் இணைந்து வரும் நிலையில், எடப்பாடி சட்டசபை தொகுதியில் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அருண்குமார் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியின் தவெக வேட்பாளராக அருண் குமார் என்பவரை கட்சித் தலைமை அறிவித்திருந்தது. அருண் குமார் வேட்பாளராகவும் அவரின் மனைவி மாற்று வேட்பாளராகவும் தவெக தரப்பில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.
வேட்பு மனு பரிசீலனையின்போது வேட்புமனுவை முறையாகப் பூர்த்தி செய்யவில்லை என தவெக வேட்பாளர் அருண் குமார் மற்றும் அவர் மனைவி ஆகிய இருவரின் வேட்பு மனுக்களையும் தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். இதன் காரணமாக எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது. களத்தில் இறங்கிய முதல் தேர்தலிலேயே ஒரு தொகுதியில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டும், போட்டியிட முடியாத செய்தி தவெக தலைவர் விஜய்க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, வேட்பாளர், வேறு கட்சிக்கு விலை போய்விட்டதாக தொண்டர்கள் குற்றம்சாட்டியதில் கடும் அப்செட் ஆனார் விஜய். இதையடுத்து தொலைக்காட்சி பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளருக்கு அந்தத் தொகுதியில் தவெக ஆதரவு அளித்தது. அவர் கணிசமான வாக்குகளைப் பெற்றாலும், சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். முன்னாள் அதிமுக நிர்வாகியான அருண் குமார், அதிமுகவினரிடம் விலைபோன காரணத்தால்தான் வேண்டுமென்றே வேட்புமனுவை முறையாகப் பூர்த்தி செய்யவில்லை. சூழ்ச்சியால்தான் எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது என அக்கட்சியினர் குற்றம்சாட்டினர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார் அருண் குமார். அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்து வரும் நிலையில், எடப்பாடி சட்டசபை தொகுதியில் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அருண்குமார் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக இருந்த அருண்குமார், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலர் பொறுப்பு வகித்தவர். அவர் தவெகவுக்கு சென்ற நிலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் மனம் மாறியதால் எடப்பாடியில் தவெகவின் விசில் சின்னம் களமிறங்கவில்லை. கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டதைப் போல, எடப்பாடியில் பழனிசாமி தோற்கடிக்கப்பட்டிருப்பார். தோல்வியடையும் சூழலை உணர்ந்த அதிமுகவினர், தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கினர், இப்போது அந்த வேட்பாளர் அதிமுகவில் இணைந்துவிட்டார் என தவெகவினர் கூறி வருகின்றனர்.