சென்னை: அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏ-க்கள் பலருக்கும் இன்னும் பதவியோ அல்லது எந்த உத்தரவாதமோ கொடுக்காததால் தங்களின் ஆதரவாளர்களிடம் புலம்ப தொடங்கி இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தவெகவின் மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டத்தில் அவர்களை அழைக்காமல், அலட்சியப்படுத்துவது விவாதமாகி இருக்கிறது.
ஜூன் மாதம் தொடங்கி ஜூலை முதல் வாரம் வரை பனையூர் தவெக அலுவலகத்தில் இணைப்பு விழாக்கள் களைகட்டியது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அதிமுகவில் இருந்து 8 முன்னாள் அமைச்சர்கள், பல முன்னாள் எம்பி-க்கள், பல முன்னாள் எம்எல்ஏ-க்கள் தவெகவில் ஐக்கியமாகினர். அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் சிட்டிங் 6 சிட்டிங் எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
ஒரு கட்டத்தில் ஹவுஸ்ஃபுல் போர்டு வைக்க வேண்டிய சூழலே ஏற்பட்டது. தவெகவில் இருக்கும் நிர்வாகிகளே தங்களின் அதிகாரம் குறைந்துவிடுமோ என்று அஞ்சும் சூழல் அதிகரித்தது. இருப்பினும் அதிமுகவின் முக்கிய தலைவர்களை தவெகவுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் தீவிரமாக இருக்கிறார். ஆனால் ஏற்கனவே தவெகவில் இணைந்த அதிமுக சீனியர் நிர்வாகிகள் பலரும் அதிருப்தி அடைந்து வருகின்றனர். சிட்டிங் எம்எல்ஏ-க்களாக இருந்து பதவியை ராஜினாமா செய்த விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்டோருக்கு மீண்டும் இடைத்தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படும் என்ற உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தரப்பு எந்தவித அதிருப்தியும் இல்லாமல் தவெகவினருடன் நெருங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்சி சம்பத், வளர்மதி, ஆனந்தன் உள்ளிட்டோருக்கு இதுவரை எந்த பதவியும் அளிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் தவெக தலைமையை அணுகுவதே பெரும்பாடாக இருக்கிறது. இதுதொடர்பாக பேசினாலும், அவர்கள் எந்த உத்தரவாதமும் அளிப்பதில்லை என்று தெரிய வந்துள்ளது. தவெகவில் மாவட்ட அளவிலான நடக்கும் ஆலோசனை கூட்டங்களுக்கும் கூட அதிமுக சீனியர்களை அழைப்பது இல்லை. அவர்களின் ஆலோசனையையும் தவெகவினர் கேட்பதில்லை. இதனால் தவெகவில் இணைந்த பின் மரியாதையும் இல்லை என்று புலம்பி வருகின்றனர். தவெகவில் இணைவதற்கு முன்பாக கட்சியில் முக்கிய பொறுப்பு, எதிர்கால வாய்ப்புகள் குறித்தெல்லாம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தவெகவில் இணைந்த பின் அந்த உறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் ஆதரவாளர்களிடம் கூறி வருகின்றனர். இதற்கு தவெகவின் உள்ளூர் நிர்வாகிகளின் முட்டுக்கட்டையும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.