டோட்டல் தமிழ்நாடு.. தவெக போட்டு வைத்த கணக்கு! அணி தாவும் கட்சிகள்! பனையூருக்கு பலம் சேர்க்குமா?


  • சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, தமிழக அரசியலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாற்றங்கள் உருவாகி வருகின்றன. குறிப்பாக எதிர்க்கட்சிகளில் இருந்து தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் தவெகவில் இணைந்து வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இந்த சூழலில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சாத்தியமான இடைத்தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் தவெக தனது அரசியல் வியூகத்தை அமைத்து வருவதாக கூறப்படுகிறது.

    Advertisement

    தவெக அமைச்சரான ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசியபோது, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 98 சதவீத வெற்றியை இலக்காகக் கொண்டு கட்சி செயல்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார். இந்த கருத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த இலக்கு நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    Advertisement

    ஏனெனில் தமிழக அரசியலில் நீண்டகாலமாக வலுவான அடித்தளத்தை கொண்டிருக்கும் திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகள் இன்னும் கணிசமான வாக்கு வங்கியை தக்க வைத்திருக்கின்றன. கடந்த தேர்தலிலும் அந்த கட்சிகளின் வாக்கு சதவீதம் முற்றிலும் சரியவில்லை என்பது தான் உண்மை.

    தவெக

    இதனால் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களையும் ஒரே கட்சி கைப்பற்றுவது எளிதான விஷயம் அல்ல என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அதேநேரத்தில், ஆட்சியில் அமர்ந்துள்ள தவெக மீது மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஆட்சியின் ஆரம்ப கட்டத்தில் மக்கள் ஆதரவு வலுவாக இருந்தாலும், அடுத்த சில மாதங்களில் ஆட்சியின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மக்கள் மதிப்பீடு செய்யத் தொடங்குவார்கள். இதனால் கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டிய தேவை தவெக தலைமைக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    உள்ளாட்சித் தேர்தல்

    இதன் ஒரு பகுதியாகவே மற்ற கட்சிகளில் இருந்து நிர்வாகிகளை வரவேற்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அதிமுகவை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் மற்றும் முன்னாள் பொறுப்பாளர்கள் தவெகவில் இணைந்து வருவது கவனிக்கப்படுகிறது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பனையூரில் நடைபெறும் இணைப்பு நிகழ்ச்சிகள் இதற்கு சாட்சியாக உள்ளன.

    அதிமுக

    அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியை தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ளும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இருப்பினும், சில முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவதால் மட்டும் அதிமுகவின் முழு வாக்கு வங்கியும் இடம் மாறிவிடும் என்று கருத முடியாது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலும் இடைத்தேர்தலும் தவெகவுக்கு இரண்டு விதமான சவால்களை உருவாக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

    Advertisement

    தனிநபர் செல்வாக்கு

    உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கலாம் என்றாலும், இடைத்தேர்தலில் நிலைமை சற்று மாறுபடக்கூடும் என்று கூறப்படுகிறது. அதற்குக் காரணம், உள்ளாட்சித் தேர்தலில் தனிநபர் செல்வாக்கு, உள்ளூர் சமூக ஆதரவு, பகுதி சார்ந்த அரசியல் சமன்பாடுகள் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு நகராட்சி, பேரூராட்சி அல்லது ஊராட்சியில் வெற்றி பெறுவதற்கு மிகப்பெரிய வாக்கு வித்தியாசம் தேவையில்லை. அங்கு உள்ளூர் அளவில் செல்வாக்கு கொண்ட நிர்வாகிகள் கட்சிக்கு பலம் சேர்க்க முடியும்.

    தவெகவின் வெற்றி

    இதனால் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து தவெகவில் இணையும் அனுபவமிக்க அரசியல் நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு உதவக்கூடும் என கருதப்படுகிறது. குறிப்பாக உள்ளாட்சி அரசியலின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் இணைவது தவெகவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால் இடைத்தேர்தல் கணக்கு முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    Advertisement

    இரட்டை இலை

    ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெறும் தேர்தலில் கட்சியின் சின்னம், பாரம்பரிய வாக்கு வங்கி, கட்சியின் அடையாளம் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டால், அவர்களை மக்கள் எவ்வாறு பார்க்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள் புதிய கட்சியின் சார்பில் போட்டியிடும்போது, அதிமுகவின் பாரம்பரிய வாக்காளர்கள் அவர்களை ஏற்றுக்கொள்வார்களா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இதுவே இடைத்தேர்தலில் தவெகவுக்கு சவாலாக அமையலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    Advertisement

    திமுக கூட்டணி

    மற்றொரு புறம், திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறி வருவதும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்கனவே தவெக ஆதர்வு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மதிமுகவும் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவை எடுக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. மேலும் சில கட்சிகளும் புதிய அரசியல் பாதையை நோக்கி நகரலாம் என்ற பேச்சு நிலவுகிறது.

    தமிழக அரசியல்

    இதனால் வரும் மாதங்களில் தமிழக அரசியல் களம் மேலும் பரபரப்பாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் தவெகவின் அமைப்பு பலத்தை சோதிக்கும் தேர்தலாக அமையக்கூடும். அதேநேரத்தில் இடைத்தேர்தல்கள் நடந்தால், அது கட்சியின் உண்மையான அரசியல் செல்வாக்கை அளவிடும் முக்கிய களமாக மாறும் என்பதில் யாருக்குமே மாற்றுக்கருத்து இல்லை.

    English Summary

    TVK intensifies expansion plans ahead of local body polls as leaders from rival parties continue joining the ruling camp.