ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்?

  • சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மற்றும் ராமதாஸின் தீவிர விஸ்வாசியான முன்னாள் எம்எல்ஏ அருள் ஆகியோர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. குறிப்பாக பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் தவெக மற்றும் திமுக ஆகிய இரு தரப்புடனும் பேசி வருகிறார். கட்சியில் தனக்கான இடம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் அருள், இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    சட்டசபைத் தேர்தல் முடிவில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் அதிமுகவில் இருந்து ஏராளமானோர் தவெகவில் இணைந்து வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பதவியை பெற்றுவிட வேண்டும் என்று திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சியினருமே தவெக பக்கம் சாய்ந்து வருகின்றனர். அதிலும் அதிமுகவினர் அதிகளவில் தவெகவில் இணைய தொடங்கி இருக்கின்றனர்.

    Advertisement

    அந்த வகையில் அடுத்ததாக அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செல்லப்பாண்டியன் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸின் தீவிர விஸ்வாசியான முன்னாள் எம்எல்ஏ அருள் ஆகியோர் தவெக-வில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டியன், சட்டசபைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    இதனால் கடந்த சில மாதங்களாகவே அதிமுக தலைமையின் செயல்பாடுகளில் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தென் தமிழகத்தில் தவெக-வின் அடித்தளத்தை பலப்படுத்தத் திட்டமிட்டு வரும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், செல்லப்பாண்டியனுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளதாகத் தெரிகிறது.

    Advertisement

    விரைவில் இவர் தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் முன்னிலையில் கட்சியில் இணையவுள்ளார். மறுபுறம், சேலம் மேற்கு தொகுதியின் முன்னாள் பாமக எம்எல்ஏ-வான இரா. அருள், பாமகவிலிருந்து விலகி மாற்றுப் பாதையைத் தேடி வருகிறார். ராமதாஸின் தீவிர விஸ்வாசியாக அறியப்பட்ட இவரின் இந்த நகர்வு பாமகவிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆனால், அருள் இன்னும் இறுதி முடிவை எடுக்காமல் திமுக மற்றும் தவெக ஆகிய இரு தரப்பிலும் தூது விட்டு வருகிறார். தவெக தரப்பிடம் கொங்கு மண்டலத்தில் தனக்குக் கூடுதல் முக்கியத்துவமும், கட்சியின் மாநில அளவிலான பொறுப்பும் வேண்டும் என அருள் நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. செங்கோட்டையன் மூலமாக அருள் காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    இதே நேரத்தில் திமுகவின் முக்கிய அமைச்சர் ஒருவரின் மூலமாக அறிவாலயத் தரப்பிலும் அருள் பேசி வருகிறார். தனக்கான எதிர்கால அரசியல் பாதுகாப்பு எங்கு உறுதியாக இருக்கும் என்பதைப் பொறுத்தே இறுதி முடிவை எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். எனினும், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் தவெக-விற்குச் செல்வது உறுதியாகிவிட்ட நிலையில், பாமக முன்னாள் எம்எல்ஏ அருளின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English Summary

    TVK: Former AIADMK Minister Chellapandian and Ramadoss loyalist former PMK MLA Arul are likely to join TVK soon