சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக்கழக தலைவர் தலைவரும், முதல்வருமான விஜய் ஆட்சியில் அதே சூழல்தான் தொடர்கிறது என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. தொடர்ந்து பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் நிலையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளே கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் சாலையோரம் படுத்திருந்த 63 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகி இருக்கிறார் விஜய். முதலமைச்சராக பதவியேற்பதற்கு முன்பாக அதாவது தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுகவின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
போதை பொருள் புழக்கம், பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு என திமுகவின் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்தால் பெண்கள் பாதுகாப்பு மேம்படுத்தப்படும், போதைப்பொருள் புழக்கம் ஒழிக்கப்படும் என கூறியிருந்தார். ஆனால் தற்போது நிலைமை வேறு ஆக இருக்கிறது போதை பொருள் கடத்தல் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தமிழக வெற்றி கழகத்தினர் அடுத்தடுத்து சிக்கி வருகின்றனர். இதை அடுத்து உடனடியாக அவர்களை கட்சியிலிருந்து நீக்கி விட்டோம்.. நடவடிக்கை எடுத்து விட்டோம் என தமிழக வெற்றிக் கழகம் சொன்னாலும், அடுத்தடுத்து சிக்கி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படித்தான் தற்போது சென்னையில் சாலையோரம் படுத்திருந்த 63 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையின் பிரபலமான அசோக் நகரில் சாலையோரம் ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். அப்பகுதியில் காலணி தைத்து அதில் கிடைக்கும் வயிற்று பசியை போக்கி வந்த அவர் இரவு நேரங்களில் கடைகளின் ஓரம் படுத்து தூங்குவது வழக்கமாம். அப்படி நேற்று இரவு வழக்கமாக தூங்கும் இடத்தில் மூதாட்டி இருந்தபோது சென்னை தியாகராய நகரை சேர்ந்த தவெக நிர்வாகியான ஆனந்த் என்பவர் மது போதையில் அந்த மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் அச்சமடைந்த மூதாட்டி சத்தம் போட்ட நிலையில் அங்கு கூடிய பொதுமக்கள் ஆனந்தை பிடித்து தர்ம அடி கொடுத்து அசோக் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்த அசோக் நகர் போலீசார், வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.