ஆர்எஸ் பாரதி பேச்சால் சிக்கல்? தவெக வழக்கறிஞர் போலீசில் பரபர புகார்!

  • சென்னை: திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி மீது தமிழக வெற்றிக் கழக நிர்வாகி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    Advertisement

    சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியன் செய்தவற்றைப்போல வேறு எவரும் செய்ததில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதியால்கூட அங்கே மருத்துவமனையைக் கொண்டுவர முடியவில்லை. அதைக் கொண்டு வந்தவர் மா.சுப்பிரமணியன். அந்த மருத்துவமனையில் நோயாளியாகச் சென்றவர்களும், அவர்களின் உறவினர்கள் வாக்களித்திருந்தால்கூட நாம் ஜெயித்திருப்போம். அவர்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது" என்று பேசி இருந்தார்.

    Advertisement

    இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.பாலாஜி. வழக்கறிஞரான இவர் தமிழக வெற்றிக் கழக உறுப்பினராகவும் உள்ளார். இவர் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி மீது புகார் ஒன்றை அளித்தார்.

    அந்த புகாரில், "சென்னை காரம்பாக்கம் சுபம் காம்ப்ளக்ஸ் பகுதியில் கடந்த 13 ஆம் தேதி கலைஞர் கருணாநிதி நினைவு நாள் புகழ் வணக்க அரசியல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Advertisement

    இந்தக் கூட்டத்தில், "முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியனை தோற்கடித்த சைதாப்பேட்டை தொகுதி வாக்காளர்களுக்கு நல்ல சாவு வராது. ஏசி பேருந்து நிறுத்தங்களை அமைத்தது நாங்கள், விசில் சின்னத்திற்கு வாக்களித்தவர்கள் கஞ்சா அடித்துக் கொண்டு அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்" என ஆர்.எஸ். பாரதி பேசியுள்ளார்.

    இந்தப் பேச்சு தொடர்பான முழுமையான வீடியோ பதிவு என்னிடம் உள்ளது. காவல்துறை விசாரணையின் போது அந்த வீடியோ பதிவை நேரில் சமர்ப்பிக்கவும் தயாராக உள்ளோம். இந்த வீடியோவை ஊடகங்களில் வெளியான பதிவுகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யலாம்.

    இது குறித்து, ஆர்.எஸ். பாரதியிடம் நேரடியாக விசாரணை நடத்தி, அவரது பேச்சின் முழுமையான பின்னணி எந்தச் சூழ்நிலையில் தெரிவிக்கப்பட்டன? யாரை குறிப்பிட்டு பேசப்பட்டது? என்பதையும் விசாரிக்க வேண்டும்.

    Advertisement

    நிகழ்ச்சிக்கு காவல்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் பெறப்பட்ட அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ பதிவுகளையும் ஆய்வு செய்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தேவையான சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டும்.

    சட்டப்படி குற்றம் அல்லது சட்டவிரோத நடவடிக்கை இருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால் ஆர்.எஸ். பாரதி மீது பொருந்தக்கூடிய சட்டப்பிரிவுகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சம்பவம் நடைபெற்ற பகுதி வளசரவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால், புகாரை சைபர் கிரைம் காவல் நிலையத்துக்கு மாற்றாமல் வளசரவாக்கம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவிலேயே விசாரிக்க வேண்டும்.

    Advertisement

    மேலும், சுபம் காம்ப்ளக்ஸ் பகுதியில் எதிர்காலத்தில் அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது பொதுமக்கள் பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்ததாக வழக்கறிஞர் பாலாஜி தெரிவித்துள்ளார். தவெக நிர்வாகியின் இந்த புகாரால் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    TVK office-bearer and a lawyer, has lodged a complaint with the Chennai Police Commissioner's office against DMK Organizing Secretary and former MP RS Bharathi.