வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்?

  • சென்னை: ஆலந்தூரில் கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தவெக நிர்வாகி வேம்புலி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். "தனி மனித மற்றும் சமூக ஒழுக்கம் குறித்து மேடையில் பாடமெடுத்த முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது கட்சி நிர்வாகிகளுக்கு எப்போது தனிமனித ஒழுக்கத்தை சொல்லித் தருவார்?" என அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    சென்னை ஆலந்தூர் மாதவபுரம் பகுதியைச் சேர்ந்த பெண், 160- வது வட்ட மகளிர் உடற்பயிற்சி மையத்தின் பொறுப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

    ஆலந்தூர் தவெக நிர்வாகி

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளராக இருந்து வந்த வேம்புலி என்பவர் அந்தப் பெண்ணுக்கு தொடர்ந்து செல்போன் மூலம் ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்ததாகவும், தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்துள்ளதால் உன்னை பணியிலிருந்து நீக்காமல் இருக்க நான் உதவுகிறேன் என அனிதாவிற்கு தொடர்ந்து தொடர்பு கொண்டு தொல்லை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    மேலும் வேம்புலி அந்தப் பெண்ணுக்கு பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் அந்தப் பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு வேம்புலி அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை அளிக்க முயன்றுள்ளார்.

    பெண்ணுக்கு பாலியல் தொல்லை

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கத்திக் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து வேம்புலி அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த போலீசார், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி வேம்புலி மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் தொல்லை அளித்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தவெக கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பு பதவிகளில் இருந்து வேம்புலியை நீக்கம் செய்து சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் எம்எல்ஏ சரவணன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

    அண்ணாமலை கண்டனம்

    இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் "தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் விஜய் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

    திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

    டிடிவி தினகரன் கண்டனம்

    அதேபோல, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை ஆலந்தூர் பகுதியில் கணவனை இழந்து தனியாக வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாக தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

    கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையைத் தொடங்கி வைத்து தனி மனித மற்றும் சமூக ஒழுக்கம் குறித்து மேடையில் பாடமெடுத்த முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது கட்சி நிர்வாகிகளுக்கு எப்போது தனிமனித ஒழுக்கத்தை சொல்லித் தருவார் ? அவர்களிடம் இருந்து எப்படி பெண்களைப் பாதுகாக்கப் போகிறார்? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

    வழக்குப்பதிவு செய்யவும், விசாரணை நடத்தவும் அதிகாரம் இல்லாத வகையில் அமைக்கப்பட்டிருக்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையால் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் விழிப்புணர்வு எனும் பெயரில் ரீல்ஸ் போட முடியுமே தவிர, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அடியோடு தடுக்க முடியாது என்ற விமர்சனங்களும் எழத் தொடங்கியிருக்கிறது.

    எனவே, ஆலந்தூர் பகுதியில் பெண்ணின் வீடு புகுந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கை அத்துமீறல்களில் ஈடுபடும் தவெகவினர் மட்டுமின்றி பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் அனைவருக்கும் பாடமாக அமைய வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Police have registered a case against TVK functionary Vembuli for sexually harassing a widow in Alandur. Political leaders have questioned, "When will CM Vijay—who lectures on stage about morality—teach personal morality to his own party functionaries?"