எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா!

  • சென்னை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், இசக்கி சுப்பையா. முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, தற்போது தனது எம்.எல்.ஏ பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு த.வெக-வில் இணைந்துள்ளார். அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன் முன்னிலையில் இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்துள்ளார்.

    Advertisement

    அதிமுக தற்போது இரண்டு அணிகளாக பிளவு பட்டிருக்கும் நிலையில், அதிமுகவினர் தவெகவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகிய 3 பேரும் நேற்று தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தனர். அவர்களது ராஜினாமா ஏற்கப்பட்டதாக பேரவைத் தலைவர் பிரபாகர் அறிவித்தார். அதோடு அவர்கள் தங்களை தவெகவில் இணைந்துக் கொண்டனர்.

    Advertisement

    இதனைத்தொடர்ந்து, அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேரின் பதவி விலகலை சபாநாயகர் ஏற்றதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளது கவனிக்கத்தக்கது.

    இசக்கி சுப்பையா 2011, 2021 தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஜெயலலிதா ஆட்சியில் இவர் அமைச்சராகவும் இருந்திருக்கிறார். ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் அவருக்கு சட்டத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் ஒரே மாதத்தில் அவர் வகுத்து வந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆதரவாளர்களுடன் இன்று தவெகவில் இணைந்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் என். ஆனந்த், செங்கோட்டையன் முன்னிலையில் இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்துள்ளார்.

    தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதாக வரும் விமர்சனம் எழுந்தபோதும், இன்று தலைமைச் செயலகத்தில் தவெகவில் இணைந்துள்ளார் இசக்கி சுப்பையா. இசக்கி சுப்பையாவை தொடர்ந்து மேலும் சில அதிமுக எம்எல்ஏக்களும் தவெக பக்கம் சாயலாம் என்று கூறப்படுகிறது.

    Advertisement

    "அதிமுகவில் இருக்க பிடிக்காததால் அங்கிருப்பவர்கள் வெளியேறுகின்றனர். தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதற்கு இதுவே காரணம். த.வெ.க நல்லாட்சி தரும் என்று எதிர்பார்க்கிறோம். அதன் காரணமாகவே அக்கட்சியில் இணைகிறோம். நாங்கள் என்ன படிக்காதவர்களா? அறிவில்லாதவர்களா? சுயமாகத்தான் சிந்தித்து முடிவெடுத்து இருக்கிறோம்" என இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார்.

    English Summary

    Isakki Subbiah was elected as the MLA representing the AIADMK in the Ambasamudram Assembly constituency of Nellai district. Former Minister Isakki Subbiah has now resigned from his post as MLA and joined the TVK. He joined the TVK in the presence of Ministers Anand and Sengottaiyan.