7வது கட்சியாக.. தவெகவுக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம்.. தமிழ்நாட்டில் மாநிலக் கட்சிகள் எவை எவை?

  • சென்னை: தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தை மாநில கட்சியாக அங்கீகரித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். திமுக, அதிமுக, தேமுதிக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் 7-வது மாநில கட்சியாக தவெகவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.

    Advertisement

    2 ஆண்டுகளுக்கு முன்பு உருவான தமிழக வெற்றிக் கழகம், சந்தித்த முதல் தேர்தலிலேயே அதிக இடங்களை வென்று தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ளது. இதன் மூலம், மிகக் குறைந்த காலத்திலேயே மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது.

    Advertisement

    நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்ற தவெக, 35% வாக்குகளைப் பெற்றது. இதன் மூலம், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. ஜோசப் விஜய் முதலமைச்சர் ஆனார். இந்நிலையில், தவெகவுக்கு மாநில கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்திருப்பது தவெக நிர்வாகிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தவெகவின் அதிகாரப்பூர்வ சின்னமாக விசில் சின்னம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மாநில கட்சி அந்தஸ்து

    ஒரு கட்சிமாநிலக் கட்சி என்ற அங்கீகாரம் பெற வேண்டுமெனில், அந்தக் கட்சி குறைந்தது ஒரு சட்டப்பேரவை அல்லது ஒரு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டிருக்க வேண்டும். மேலும் தேர்தலில் பதிவான வாக்குகளில் குறைந்தது 6% வாக்குகள் மற்றும் 2 எம்எல்ஏ இடங்கள் அல்லது மொத்த இடங்களில் 3% இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

    Advertisement

    இந்த விதிமுறைகளை, எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே தவெக பூர்த்தி செய்திருப்பதால், தற்போது அக்கட்சிக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 6 இல் இருந்து 7ஆக உயர்ந்துள்ளது.

    மாநில கட்சிகள் எவை எவை?

    திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, தேமுதிக ஆகிய 6 கட்சிகள் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆகும். அந்த பட்டியலில் தற்போது தவெகவும் இணைந்துள்ளது.

    பாமக, கடந்த தேர்தலின்போது, மாநிலக் கட்சி அந்தஸ்தை இழந்தது. இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு விதிகளின்கீழ், பாமக தனது பாரம்பரியச் சின்னமான 'மாம்பழம்' சின்னத்தைத் தொடர்ந்து பெற்று தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது.

    Advertisement

    விசில் சின்னம்

    தேர்தல் ஆணையத்தால் ​அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே நிரந்தரச் சின்னம் அந்த மாநிலத்தில் ஒதுக்கப்படும். ​பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்குத் தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையம் வழங்கும் 'பொதுச் சின்னங்கள்' பட்டியலிலிருந்தே சின்னம் கோர முடியும்.

    அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் பொதுச் சின்னமாக ஒதுக்கப்பட்டது. தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை மாநில கட்சியாக அங்கீகரித்ததன் மூலம் விசில் சின்னம் தவெகவின் நிரந்தர சின்னமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

    English Summary

    Election Commission of India has recognized the Tamizhaga Vettri Kazhagam (TVK) as a recognized state party in Tamil Nadu. The Commission has granted this status to TVK, making it the seventh state party in Tamil Nadu, following the DMK, AIADMK, DMDK, VCK, the Communist Party of India, and the Naam Tamilar Katchi.